பறவைக் காய்ச்சல் எதிரொலி: கறிக்கோழி விலை சரிவு
கர்நாடகாவில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு எதிரொலியாக, தமிழகத்தில் கறிக்கோழி விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.
கடந்த டிசம்பர் மாதம் 29 ம் தேதி கர்நாடக மாநிலம் பெங்களூரு தசரஹள்ளி பகுதியில் உள்ள கோழிக் கடையில் நாட்டு கோழிகள் தொடர்ந்து இறந்தன. இதனையடுத்து இறந்த கோழிகளின் மாதிரிகள் போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கின நோய் ஆராய்ச்சி மையத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் பறவை காய்ச்சல் நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அதன் மாதிரிகளை ஆய்வு செய்த உலக சுகாதார நிறுவனம் எச்5 என்8 என்ற அதிதீவிர பறவை காய்ச்சல் வைரஸ் தொற்று என உறுதி செய்தது. இதனால் அப்பகுதிகளில் உள்ள 900 கோழிக்கடைகளை மூடி நோய் பரவமால் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதனால் கறிக்கோழி விற்பனை வீழ்ச்சி அடைந்து வருகிறது. கடந்த 17-ம் தேதி கறிக்கோழி உயிருடன் ஒரு கிலோ 79 ரூபாயாக இருந்த விலை நேற்று கிலோ ஒன்றுக்கு 5 ரூபாய் குறைந்து 74 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று மேலும், 5 ரூபாய் குறைந்து கிலோ ஒன்றின் விலை 69 ரூபாயாக விலை சரிந்துள்ளது.
கடந்த 2 நாட்களில் கறிக்கோழி விலை 10 ரூபாய் சரிவு ஏற்பட்டுள்ளது குறித்து கறிக்கோழி உற்பத்தியாளர்களிடம் கூறுகையில், கர்நாடகாவில் பறவை காய்ச்சல் கண்டறிய பட்டுள்ளதால் கறிகோழி விற்பனை சரிவடைந்து தேக்கம் ஏற்பட்டதோடு, தமிழகத்தில் தைப்பூச பண்டிகையொட்டியும் விற்பனை சரிவடைந்துள்ளதாகவும் தெரிவித்தனர். இவ்விலை இன்னும் சற்று குறைந்த அதன் பிறகே உயர வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.