மயிலாடுதுறை| போதையில் 2 காவலர்களை அரிவாளால் வெட்டிய நபர்.. என்ன நடந்தது?
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலமங்கைநல்லூர் கிராமம் மேலத்தெருவில் நேற்று இரவு குடிபோதையில் ஒரு நபர் அரிவாளுடன் அட்ராசிட்டியில் ஈடுபட்டு மிரட்டல் விடுப்பதாக பெரம்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் சென்றுள்ளது.
தகவலை அடுத்து, காவல் நிலையத்தில் இருந்து முதல் நிலைக் காவலர் சாமிநாதன் மற்றும் உளவு பிரிவு காவலர் சதீஷ் ஆகிய இருவர் சம்பவ இடத்திற்கு சென்று அந்த நபரிடம் இருந்த சிறிய அரிவாளை பிடுங்கினர். அப்போது அவர் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுழற்றி போலீசாரை அச்சுறுத்தியுள்ளார். அந்த நபரை மடக்கி பிடிக்க முற்பட்ட முதன்மை காவலர் சுவாமிநாதனுக்கு கட்டை விரலில் காயம் ஏற்பட்டது. உளவு பிரிவு காவலர் சதீஷின் வயிற்றில் லேசான அளவுக்கு கத்தி குத்து விழுந்தது. தொடர்ந்து இருவரையும் கீழே தள்ளிவிட்டு அந்த நபர் தப்பி ஓடினார்.
தப்பியோடிய நபர் விபரீத முடிவு..
காயம்பட்ட போலீசார் இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இருவருக்கும் தையல் போடப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இச்சம்பவம் குறித்து பெரம்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். போலீசாரை குத்தி விட்டு தப்பி ஓடிய நபர் மேலத்தெருவைச் சேர்ந்த ஆனந்தன் என்பது தெரியவந்துள்ளது. போலீசார் அவரை தேடி வந்தனர்.
போலீஸாரை மதுபோதையில் தாக்கிய ஆனந்தன் (40) திருவாரூர் மாவட்டம் ஆண்டிபந்தலை அடுத்த பனங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர். லாரி டிரைவரான இவர் மனைவியின் ஊரான மேலமங்கைநல்லூரில் வசித்து வருவது தெரியவந்துள்ளது. இவருக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில் தப்பி ஓடி தலைமறைவாக இருந்த ஆனந்தன் போலீசாருக்கு பயந்து இன்று அதிகாலை அவரது வீட்டின் அருகில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதைத்தொடர்ந்து அவரது உடல் திருவாரூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாவட்ட எஸ்பி ஸ்டாலின் இன்று காலை சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
போலீசாரை கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்ற நபர் பயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

