மதுபோதையில் காரை கட்டுப்பாடின்றி ஓட்டிய ஓட்டுநர்: கர்ப்பிணி பெண் உட்பட 3 பேர் உயிரிழப்பு

மதுபோதையில் காரை கட்டுப்பாடின்றி ஓட்டிய ஓட்டுநர்: கர்ப்பிணி பெண் உட்பட 3 பேர் உயிரிழப்பு
மதுபோதையில் காரை கட்டுப்பாடின்றி ஓட்டிய ஓட்டுநர்: கர்ப்பிணி பெண் உட்பட 3 பேர் உயிரிழப்பு

சீர்காழி அருகே அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து இருச்சக்கர வாகனத்தில் மோதியதில் கர்ப்பிணி பெண் உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா கன்னியாகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். இவர் கர்ப்பிணியான தனது மனைவி தமிழ்வாணியை பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்று விட்டு இருக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். அப்போது கற்கோயில் கிராமத்தில் எதிரே அதிவேகமாக வந்த கார் மோதியதில் கர்ப்பிணியான தமிழ் வாணியும் அவரது கணவர் புருஷோத்தமனும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தொடர்ந்து கட்டுப்பாட்டை இழந்து வேகமாக சென்ற கார் சாலையோரம் நடந்து சென்ற உடையாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த தையல்நாயகி, ராணி ஆகியோர் மீது மோதியது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இதனையடுத்து காரை நிறுத்திவிட்டு ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். விபத்தை கண்ட அப்பகுதி மக்கள் ஓடி வந்து காயமடைந்த தையல்நாயகி, ராணி ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே தையல்நாயகி பரிதாபமாக உயிரிழந்தார். ராணி மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

ஓட்டுனரின் அஜாக்கிரதையால் தறிகெட்டு ஓடி வந்த கார் மோதிய விபத்தில் கர்ப்பிணி பெண் அவரது கணவர் மற்றும் மூதாட்டி ஆகிய மூவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அங்கு திரண்ட பொது மக்கள் மற்றும் இறந்தவர்களின் உறவினர்கள் விபத்துக்கு காரணமான காரை அடித்து நொறுக்கி குளத்தில் தள்ளினர். மது போதையில் விபத்தை ஏற்படுத்திய வைத்தியநாதபுரத்தை சேர்ந்த மருந்துக்கடை உரிமையாளர் அருண்குமாரை கைது செய்யக்கோரி இறந்தவர்களின் உடலை எடுக்க விடாமல் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த சீர்காழி கோட்டாட்சியர் நாராயணன் மற்றும் காவல்துணை கண்காணிப்பாளர் லாமேக் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனிடையே குடி போதையில் விபத்தை ஏற்படுத்திய மருந்துக்கடை உரிமையாளரை வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் கைது செய்தனர். இதனால் சாலைமறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். பின்னர் இறந்த தமிழ்வாணி, புருஷோத்தமன் உடலை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமணைக்கு கொண்டு சென்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com