செய்தியாளரை தாக்கிய போதைக்கும்பல்.. காவல்துறையினர் மீதும் குற்றச்சாட்டு!
தன்னை தாக்கியவர்கள் கஞ்சா போதையில் இருந்ததாகவும், கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்தும் தமிழக முதல்வரின் நடவடிக்கையை திசைதிருப்ப காவல்துறை பொய்யான அறிக்கை வெளியிட்டதாகவும் காஜா மைதீன் குற்றம் சாட்டுகிறார். தாக்குதல் காரணம், சிசிடிவி ஆடியோ, கைப்பற்றப்பட்ட தொலைபேசி பதிவுகள் மூலம் வெளிவரும் என கூறி, தன்னை தாக்கிய கும்பல் மற்றும் காவல்துறையினருக்கு எதிராக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோருகிறார்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை சேர்ந்த தனியார் நிறுவன செய்தியாளர் காஜா மைதீன் மீது போதைக்கும்பல் ஒன்று கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளது. வீட்டில் இரவு உறங்கிக் கொண்டிருந்தபோது மூன்று பேர் அவரை வீட்டிலிருந்து வெளியே அழைத்து பாட்டிலால் தாக்கியுள்ளனர். பலத்தகாயம் அடைந்த அவர் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்கு காயம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இது குறித்து முத்துப்பேட்டை காவல் துறையினர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், செய்தியாளர் ஒரு பெண்ணை மிரட்டியதாகவும் அவரது உறவினர்களே அவரை தாக்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்தநிலையில் காவல்துறையினர் தன் மீது வேண்டுமென்றே பழி போடுவதாகவும், தன்னை தாக்கியவர்கள் கஞ்சா போதையில் இருந்ததாகவும், கஞ்சா விற்பனையை தடுக்கும்விதமாக தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்துவரும் நிலையில் அதனை திசை திருப்புவதற்காக தன் மீது வேண்டுமென்று பழிபோடுவதாகவும் தாக்கப்பட்ட செய்தியாளர் கூறியுள்ளார்.
மேலும் தன்னை தாக்கியவர்கள் எதற்காக தாக்கினார்கள் என்பது சிசிடிவி காட்சியில் ஆடியோ உடன் உள்ளது. எனது தொலைபேசியும் எடுத்து சென்று விட்டனர், அதில் நான் யார் யாரிடம் என்னென்ன பேசினேன் என்பதும் உள்ளது. அதனை ஆய்வு செய்தாலே உண்மை தெரிய வரும். தன்னை தாக்கியவர்கள் மீதும், தன் மீது பழி போடும் காவல்துறையினர் மீதும் தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
