தமிழகம் வறட்சி மாநிலம்: முதலமைச்சர் பன்னீர்செல்வம்
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்கப்படும் என முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் வறட்சி பாதிப்பு குறித்த ஆய்வறிக்கைகளை மாவட்ட ஆட்சியர்கள் முதலமைச்சரிடம் சமர்ப்பித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வறட்சி நிவாரணக் கோரிக்கை மனு மத்திய அரசுக்கு விரைவில் அனுப்பப்படும் என்றும் அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகள் செலுத்த வேண்டிய நிலவரி முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.இந்த ஆண்டு கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்பட்ட 3,028 கோடி ரூபாய் பயிர் கடன், மத்தியக் காலக் கடனாக மாற்றியமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.இதற்கான அன்னவாரி சான்றிதழ்கள் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
33 சதவீதத்தற்கு மேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள விவசாயிகளுக்கு நெல் பயிர் ஏக்கருக்கு ரூ.5,465, மானாவாரி பயிருக்கு ஏக்கருக்கு ரூ.3,000, நீண்டகால பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு 7287 ரூபாயும் முசுக்கட்டை பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 3000 ரூபாய் என்ற வீதத்தில் நிவாரணத் தொகை வழங்கப்படும்.
பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகள் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து பயிர் இழப்புக்கான இழப்பீட்டுத் தொகையைப் பெற இயலும் என்றும் அவர் கூறியுள்ளார்.முழு பயிரிழப்பு ஏற்பட்டிருந்தால் விவசாயிகள் மாவட்டத்தை பொறுத்து ஏக்கர் ஒன்றுக்கு 21,500 ரூபாய் முதல் 26,000 ரூபாய் வரை காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து இழப்பீடு பெற இயலும் என்றும் முதலமைச்சர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
டெல்டா மாவட்டங்களைப் பொறுத்தவரை இழப்பீட்டுத் தொகை 25000 ரூபாய் என அவர் கூறியுள்ளார். டெல்டா மாவட்டங்களில் 80 சதவீதம் மகசூல் இழப்பு ஏற்பட்டிருந்தால் ஏக்கர் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய், 60 சதவீதம் மகசூல் இழப்பு ஏற்பட்டிருந்தால் ஏக்கர் ஒன்றுக்கு 15 ஆயிரம் ரூபாய், 33 சதவீத மகசூல் இழப்பு ஏற்பட்டிருந்தால் ஏக்கர் ஒன்றுக்கு 8250 ரூபாய் பெற இயலும் எனவும் பன்னீர்செல்வம் சுட்டிக்காட்டியுள்ளார்.