அடுத்தாண்டு ஜூலை மாதம் முதல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிம சான்றிதழ், வாகன பதிவுச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
இச்சான்றிதழ்களில் பல்வேறு அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் இடம் பெற்றிருக்கும். பயன்படுத்துவோரின் தகவல்களை விரைவில் பெறும் வகையில் மைக்ரோ சிப்புகள், QR CODE, NFC தொழில் நுட்பங்கள் புதிய சான்றிதழ்களில் இடம் பெற்றிருக்கும். மேலும் போலி சான்றிதழ்களை உருவாக்க முடியாத வகையில் நவீன அச்சு தொழில்நுட்பங்கள் சான்றிதழ்களில் பயன்படுத்தப்படும்.
இது தவிர ஹோலோகிராம் உள்ளிட்ட அம்சங்களும் இச்சான்றிதழ்களில் சேர்க்கப்படும். மத்திய, மாநில அரசுகளின் சின்னங்களும் வழங்கும் அமைப்பின் பெயர், பெற்றிருப்பவரின் பெயர், ரத்த வகை உள்ளிட்ட தகவல்கள் இடம் பெற்றிருக்கும். இது தவிர உடலுறுப்பு தானம் தொடர்பான உறுதிமொழி அளித்திருப்பின் அத்தகவலும் இடம் பெற்றிருக்கும்.
வரும் ஜூலை முதல் புதிய வாகனங்கள் வாங்குவோருக்கு புதிய சான்றிதழ்கள் மட்டுமே வழங்கப்படும். ஏற்கனவே பழைய சான்றிதழ்கள் வைத்திருப்போர் அதை புதுப்பிக்க வரும் போது புதிய சான்றிதழ்கள் வழங்கப்படும்.