உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு 40 லட்சத்துடன் ஓடிய டிரைவர் கைது
கோவையில் உரிமையாளரின் கண் முன்னே ரூ.40 லட்சம் பணத்துடன் காரை கடக்தி சென்ற ஓட்டுனரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோவை நீலிக்கோணம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி தோட்டத்தை விற்று 40 லட்சம் பணத்துடன் வீடு திரும்பியுள்ளார். அப்போது பணப்பையை எடுத்து வருமாறு ஓட்டுனர் கிஷோரிடம் கூறிவிட்டு, வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.
ஆனால் ஓட்டுநர் கிஷோர் பணத்துடன் காரை திருப்பி கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அதிர்ச்சியடைந்த பழனிச்சாமி கோவை சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். பணத்துடன் சென்ற கிஷோர் ஈரோட்டை சேர்ந்த தனது நண்பர் கலைச்செல்வனுடன் பதினைந்து நாட்களாக புதுச்சேரி, பெங்களூர் என பல்வேறு பகுதிகளுக்கு சென்று பணத்தை செலவு செய்து சுற்றி திரிந்துள்ளார்.
இந்நிலையில் கிஷோர் மற்றும் அவரது நண்பர் கலைச்செல்வனையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருடிய பணத்தில் அவர்கள் வாங்கிய நகை, செல்போன் மற்றும் 35 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், அவரிடமிருந்த காரையும் கைப்பற்றினர்.
கிஷோர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உல்லாசமாக பணம் செலவழித்து வாழ்வை மகிழ வேண்டும் என்பது தனது ஆசை என்பதால், இப்படி பணத்தை கொள்ளையடித்து சென்றதாக கிஷோர் தெரிவித்துள்ளார்.