தேனி: 10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம்..கசியும் நீரை சிறிது சிறிதாக எடுத்து பருகும் மக்கள்!
தேனி மாவட்டம் கடமலை - மயிலை ஒன்றியத்திற்கு உட்பட்ட கண்டமனூர் கிராமம், வளர்ந்து வரும் முக்கிய நகர் பகுதியாக விளங்கி வருகிறது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இக்கிராமத்தில் மக்களின் அன்றாட குடிநீர் தேவைக்காக 30 ஆயிரம் கொள்ளளவு முதல் 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 6 மேல்நிலை குடிநீர் தொட்டிகளும், 10-க்கும் மேற்பட்ட தரைதள குடிநீர் தொட்டிகளும் அரசு சார்பில் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.
கண்டமனூர் பகுதி குடிநீர் தேவைக்காக வீரபாண்டி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் 3.50 லட்சம் லிட்டர் குடிநீரும் குன்னூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் 3 லட்சம் லிட்டர் குடிநீரும் நாள்தோறும் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், பல்வேறு காரணங்களை கூறி கண்டமனூர் ஊராட்சி நிர்வாகம் மூலம் குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு ஒருமுறை தான் கண்டமனூர் கிராமத்திலுள்ள வீதிகளுக்கு குடிநீர் வழங்கப்படுவதாகவும் அதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குடிநீர் பற்றாக்குறையால் மாநில நெடுஞ்சாலையில் செல்லும் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய்களில் கசியும் நீரை போட்டி போட்டு குடங்களில் எடுக்கும் நிலைக்கு கண்டமனூர் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஒரு சில மக்கள் தொடர்ந்து விலை கொடுத்து குடங்களில் தண்ணீரை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
தண்ணீர் கலங்கலாக வந்தாலும் வேறு வழியின்றி மக்கள் அதனையே குடிநீராக தொடர்ந்து குடித்து வருவதாகவும், அதனால் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருவதாகவும், அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படுவதோடு, பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயமும் உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை முழுவதுமாக நீக்கி தங்களுக்கு நாள்தோறும் குடிநீர் வழங்க வழிவகை செய்ய வேண்டும் என்று கண்டமனூர் கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து கடமலை - மயிலை ஒன்றிய கிராம ஊராட்சி ஆணையாளரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது, கண்டமனூர் ஊராட்சி நிர்வாகத்திடம் உடனடியாக பேசுவதாகவும் கண்டமனூர் கிராமத்தில் ஆய்வு செய்து நிரந்தரமாக அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்
செய்தியாளர்: மலைச்சாமி