மாணவர்களின் பாசப்போராட்டத்திற்கு வெற்றி: ஆசிரியரின் பணியிட மாற்றம் நிறுத்தம்
திருவள்ளூர் மாவட்டத்தில் பணியிட மாற்றம் பெற்ற ஆசிரியரை சூழ்ந்துக் கொண்ட மாணவர்களின் பாசப்போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த வெள்ளியகரம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 250க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் ஆங்கில ஆசிரியராக உள்ள பகவான் என்பவர் பணியிட மாறுதல் பெற்றுள்ளார். அவர் பணி மாறுதல் பெற்று வேறு பள்ளிக்கு செல்லக் கூடாது என நேற்று முன் தினம் மாணவர்களும் பெற்றோரும் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் நேற்று பணிமாறுதல் பெற வந்த ஆசிரியர் பகவானை மாணவர்கள் சூழ்ந்து கொண்டு கதறி அழுதனர்.
வேறுபள்ளிக்கு செல்லக்கூடாது என ஆசிரியரிடம் மாணவர்கள் மன்றாடினர். பள்ளியில் இருந்த மற்ற ஆசிரியர்கள் மாணவர்களை சமாதானம் செய்ய முயன்றனர். இருப்பினும் ஆங்கில ஆசிரியரை பிரிய மனம்இல்லாமல் மாணவ மாணவிகள் கண்ணீர் விட்டு அழுதது காண்போரை மனம் உருகச் செய்தது. இந்தச்சம்பவத்தையடுத்து ஆசிரியர் பகவானின் பணி மாறுதல் உத்தரவை 10 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இதனை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன் உறுதி செய்துள்ளார். இதைத் தொடர்ந்து ஆசிரியர் பகவான் மீண்டும் பள்ளிக்குச் சென்றதால், மாணவர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர்.