பாசனத்திற்கு அணைகள் திறப்பு.. மகிழ்ச்சியில் விவசாயிகள்..
விவசாயிகளின் பாசனத்திற்காக கல்லணை, பவானிசாகர், பாபநாசம் அணைகளிலிருந்து இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டது.
டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. அமைச்சர்கள் ஓ.எஸ்மணியன், துரைக்கண்ணு, காமராஜ் ஆகியோர் அணை திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மேலும் கல்லணை கால்வாயில் ஆயிரத்து 300 கனஅடியும் கொள்ளிடத்தில் ஆயிரத்து 200 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இதேபோல் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு பின் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 120 அடி உயரம் கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82 அடியாக உயர்ந்துள்ளது. அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் அணையை திறந்து வைத்து, மலர்தூவி வரவேற்றனர். பிப்.1ம் தேதி வரை 80 நாட்கள் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் பாபநாசம் அணையிலிருந்து 18 மாதங்களுக்குப் பிறகு பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த சில வாரங்களாக பெய்த மழை காரணமாக, அணையின் நீர் மட்டம் 91 அடியாக உயர்ந்துள்ளது. தற்போது அணையிலிருந்து ஆயிரத்து 400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 81 ஆயிரத்து 107 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.