தமிழக அரசின் இரட்டை வரி: ஐநாக்ஸ், பிவிஆர் இன்று முதல் ஸ்ட்ரைக்
தமிழக அரசின் இரட்டை வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் உள்ள ஐநாக்ஸ், பிவிஆர் மல்ட்டிபிளக்ஸ் திரையரங்குகள் இன்று முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றன.
தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த 27ஆம் தேதி முதல் உள்ளாட்சி அமைப்புகளுக்கான கேளிக்கை வரி அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, தமிழ் படங்கள் 10 சதவீதமும், பிற மொழி திரைப்படங்கள் 20 சதவீதமும் கேளிக்கை வரியாக செலுத்த வேண்டும். இதனால், பிறமொழி திரைப்படங்களை திரையிடும் மல்ட்டிபிளக்ஸ் திரையரங்குகள் பெருமளவில் பாதிப்படையும் என்பதால், இன்று முதல் சென்னையில் உள்ள மல்ட்டிபிளக்ஸ் திரையரங்குகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் என இந்திய மல்ட்டிபிளக்ஸ் சங்கத் தலைவர் தீபக் அஷர் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், ஐநாக்ஸ், பிவிஆர் ஆகிய திரையரங்குகள் இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும். இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, குறிப்பிட்ட இந்த திரையரங்குகளின் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த வேலை நிறுத்தத்தில் சத்யம், மாயாஜால், லூக்ஸ் போன்ற மல்ட்டிபிளக்ஸ் பங்கேற்கவில்லை. தமிழக திரையரங்குகளின் முடிவு புதன்கிழமை நடைபெறவுள்ள திரையரங்க உரிமையாளர் சங்க ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னரே அறிவிக்கப்படும்.