
விருதுநகரில் நடைபெற்று வரும் இரட்டை ரயில் இணைப்புப் பாதை பணிகளால், ராஜபாளையத்தை கடந்து செல்லும் பொதிகை ரயில் இரண்டரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
விருதுநகரில் இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. நேற்று இறுதிகட்ட பணிகள் நடைபெற்றதாக தெரிகிறது. இதனால் தென் பகுதியில் இருந்து வரும் கொல்லம், பொதிகை உள்ளிட்ட ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது.
செங்கோட்டையில் இருந்து ராஜபாளையம் வழியாக சென்னை செல்லும் ரயில் நேற்று மாலை சுமார் 7.20 மணியளவில் ராஜபாளையம் வந்தடைந்தது. ஆனால் அதன் பின்னர் தொடர்ந்து ரயிலை இயக்க அனுமதி கிடைக்காததால் ரயில் ராஜபாளையம் ரயில் நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டது.
அதேபோல 7.40 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் அங்கேயே நிறுத்தப்பட்டது. ரயில் நிறுத்தப்பட்ட காரணமும் பயணிகளுக்கு முறையாக அறிவிக்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் பெரியவர்கள், சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுடன் வந்திருந்தவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
பின்னர் இரண்டரை மணி நேரம் தாமதமாக அதாவது 10.12 மணிக்கு ரயில் ராஜபாளையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது.