ஆந்திரா போக இனி மாதவரம்தான் போக வேண்டும்

ஆந்திரா போக இனி மாதவரம்தான் போக வேண்டும்
ஆந்திரா போக இனி மாதவரம்தான் போக வேண்டும்

ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகள், சென்னை கோயம்பேடுக்கு பதிலாக, இன்று முதல் மாதவரம் அடுக்குமாடி பேருந்துநிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.

தமிழகத்தில் முதன்முறையாக அடுக்குமாடி பேருந்துநிலையம் சென்னையை அடுத்த மாதவரத்தில் திறக்கப்பட்டுள்ளது. மாதவரத்தில் அடுக்குமாடி புறநகர் பேருந்துநிலையத்தை தலைமைச்செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 10ஆம் தேதி திறந்துவைத்தார். 

8 ஏக்கர் பரப்பளவில், 95 கோடி ரூபாய் மதிப்பில் மாதவரம் அடுக்குமாடி பேருந்துநிலையம் கட்டப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் கீழ்தளம், மேல் தளத்தில் 100க்கும் அதிகமான வாகனங்களை நிறுத்தி வைக்கும் வகையில் இந்தப் பேருந்து நிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக மாதவரத்தில் இருந்து ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களுக்கு 42‌ பேருந்துகள் இயக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கோயம்பேட்டில் இருந்து ஆந்திரா, தெலங்கானாவுக்கு இயக்கப்பட்ட பேருந்துகள் அனைத்தும் இன்று முதல் மாதவரம் அடுக்குமாடி பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. 

மாதவரம் அடுக்குமாடி பேருந்து நிலையத்தில் இருந்து  திருப்பதி, காளஹஸ்தி, நெல்லூர், விஜயவாடா போன்ற இடங்களுக்குச் செல்லும் பயணிகள், இனி மாதவரம் பேருந்துநிலையத்திற்கு சென்று தான் பேருந்து ஏற வேண்டும். பயணிகளின் வசதிக்காக கோயம்பேடு, பாரிமுனை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாதவரம் பேருந்து நிலையத்திற்கு மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.


 
மேலும், இங்கு 70 கார்கள், ஆயிரத்து 500 இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதியும் செய்யப்பட்டுள்ளது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், அவசர கால மருத்துவ உதவி உள்ளிட்ட வசதிகளும் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளதால், மாதவரம் அடுக்குமாடி பேருந்துநிலையம் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 

பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக ஆயிரக்கணக்கானோர் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்து வருகின்றனர். இதனனை கருத்தில் கொண்டு படிப்படியாக‌ விரைவு பேருந்துகளும் மாதவரத்திலிருந்து இயக்கப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் கோயம்பேட்டை அடைய போக்குவரத்து வசதிகள் இருப்பது போல மாதவரத்திற்கும் செய்து தர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com