11.30 மணி முதல் 3.30 மணி வரை திறந்த வெளியில் வேலை செய்வதை தவிருங்கள்- வானிலை மையம்
11.30 மணி முதல் 3.30 மணி வரை திறந்த வெளியில் வேலை செய்வதை தவிர்க்க வேண்டும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் தமிழகத்தில் இன்று தொடங்கியது. இன்று தொடங்கிய கத்தரி வெயில் 28 ஆம் தேதி நிறைவடைகிறது. இந்நிலையில், அடுத்த 2 நாட்களில் 11.30 மணி முதல் 3.30 மணி வரை திறந்த வெளியில் வேலை செய்வதை தவிர்க்க வேண்டும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தமிழகத்தில் வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் பிற மாவட்டங்களில் வறண்ட வானிலை இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
மதுரை, திருச்சி, சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் 40-41 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாக வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் பகுதி மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் அதிகபட்சம் 37 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.