தமிழகத்திலும் எங்களை நிர்வாணமாக ஓட விடாதீர்கள்: அய்யாக்கண்ணு
மத்திய அரசு எங்களுடைய போராட்டத்தை மதிக்காமல் நிர்வாணமாக ஓட வேண்டிய நிலையை ஏற்படுத்தியதைப் போல, தமிழ்நாட்டிலும் அப்படிப்பட்ட நிலையை ஏற்படுத்திவிடாதீர்கள் என்று தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை சேப்பாக்கத்தில் போராட்டம் நடத்திவரும் அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் கூறுகையில், “வரலாறு காணாத வறட்சியைக் கண்ட தமிழகத்திற்கு வறட்சி நிவாரண நிதி ஒரு பைசா கூட கொடுக்கவில்லை. 1748 கோடியை அடுத்த வருடம் பயிர் செய்வதற்கு கொடுக்கிறார்கள். அழிந்துபோன எங்களுடைய பயிருக்கு நஷ்ட ஈடு ஏன் நஷ்ட ஈடு கொடுக்கவில்லை. திருவண்ணாமலை மாவட்டத்தில் சேத்துப்பட்டு என்ற ஊரில் ஒழுங்குமுறைக் கூடத்தில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள நெல்லை வாங்கிக்கொண்டு போய்விட்டு 7 மாதங்களாக பணம் கொடுக்கவில்லை. முசிறி தாலுக்காவில் ஜம்புநாதபுரம் சொசைட்டியில் 10 கோடி ரூபாய் விளைபொருட்களை எடுத்துச் சென்றுவிட்டு இன்னும் பணம் தர மறுக்கிறார்கள். 60 வயதுக்கு மேலான விவசாயிகளுக்கு ஓய்வூதியம் தருவதாக முதலமைச்சர் கூறியது என்ன ஆனது? விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க மாட்டேன் என்று முதலமைச்சர் சொன்னார். அதை ஏன் நிறைவேற்றவில்லை” என்றார்.
மேலும், “தமிழக அரசு எங்களை அரை நிர்வாணமாக்கிவிட்டது. நாங்கள் கொடுக்கும் கரும்புக்கு பணம் தரவில்லை. எங்கள் வயலில் ஹைட்ரோ கார்பனையும், மீத்தேனையும் எடுத்து எங்களை மத்திய அரசு அழிக்கப் பார்க்கிறது. எங்கள் சட்டை பரிபோய்விட்டது. எங்கள் வேட்டி பறிபோய்விட்டது. எங்களை நிர்வாணமாக்கி ஓடவிடாதீர்கள். நாங்கள் டெல்லியில் நிர்வாணமாக ஓடினோம். அதுபோல தமிழகத்திலும் எங்களை நிர்வாணமாக ஓடவிடாதீர்கள். அரசு நியாயம் செய்யவில்லை என்றால் சாவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. அடுத்த மாதம் 10 ஆம் தேதி வரை 32 நாட்கள் போராட்டம் நடத்த உள்ளோம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சென்னை வந்து போராடுவார்கள். இறந்த விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும். அகில இந்திய அளவில் விவசாயிகள் ஒருங்கிணைப்பு நடந்துள்ளது. அதன் விளைவாகதான் மத்தியப் பிரதேசத்திலும், மஹாராஷ்டிராவிலும் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் போராட்டம் இந்தியா முழுக்க தொடரும். தேர்தல் வந்த விவசாயிகளை நாட்டின் முதுகெலும்பு என்பதும், தேர்தல் முடிந்தவுடன் அடிமைகள் போல நடத்துவதும் நடந்துவருகிறது” என்று அய்யாக்கண்ணு கூறினார்.