“விஷமிகள் திட்டமிட்டு பரப்பும் வதந்திகளை நம்ப வேண்டாம்” - ஸ்டாலின்
கருணாநிதி உடல்நிலை குறித்து விஷமிகள் திட்டமிட்டு பரப்பும் எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டது. இதனையடுத்து பல அரசியல் தலைவர்களும் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று அவரின் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்து வருகின்றனர். இதனிடையே கருணாநிதிக்கு ஏற்பட்ட நோய்த்தொற்று, காய்ச்சல் குறைந்து கொண்டிருப்பதாக ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கருணாநிதி உடல்நிலை குறித்து விஷமிகள் திட்டமிட்டு பரப்பும் எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கருணாநிதிக்கு அளிக்கப்பட்டு வரும் தொடர் சிகிச்சையின் காரணமாக அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவர்கள் கருணாநிதியை நன்றாக கவனித்து சிகிச்சை அளித்து வருவதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவர்கள் வேண்டுகோள்படி திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கருணாநிதியை சந்திக்க வர வேண்டாம் என்றும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். விஷமிகள் திட்டமிட்டுப் பரப்பும் எந்த வதந்திகளுக்கும் செவி மடுக்க வேண்டாம் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.