வாக்குவாதங்களில் ஈடுபடக் கூடாது: ஊழியர்களுக்கு போக்குவரத்துத்துறை அறிவுறுத்தல்
பேருந்து கட்டண உயர்வு தொடர்பாக மக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு, போக்குவரத்துக் கழக பணியாளர்கள் உரிய முறையில் விளக்கமளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பேருந்து கட்டண உயர்வை தவிர்க்க இயலாத நிலையில் அரசு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஓட்டுனர்கள், நடத்துனர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களும் அலுவலர்களும் பொது மக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு உரிய முறையில் விளக்கமளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மக்களுடன் எவ்வித வாக்குவாதங்களில் ஈடுபடாமல் கனிவுடன் அணுகுமாறும் போக்குவரத்துக் கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.
6 ஆண்டுகளுக்குப் பிறகு பேருந்து கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி மாநகரம் மற்றும் நகரங்களில் 1 முதல் 20 நிலைகளை கொண்ட வழித்தடத்தில் 3 ரூபாயாக இருந்த குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 5 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 12 ரூபாயாக இருந்த அதிகபட்ச கட்டணம் 19 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரத்தில் 1 முதல் 28 நிலைகள் வரை உள்ள வழித்தடத்தில் 3 ரூபாயாக இருந்த குறைந்தபட்ச கட்டணம் 5ரூபாயாகவும் அதிகபட்ச கட்டணம் 14 ரூபாயில் இருந்து 23 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. வெளியூர் செல்லும் பேருந்துகளுக்கான கட்டணம் சாதாரண பேருந்துகளில் 10 கிலோ மீட்டர் பயணம் செய்ய 5 ரூபாய் என்றிருந்தது 6 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.