உள்நாட்டு விமான சேவை நாளை நள்ளிரவு முதல் நிறுத்தம்
உள்நாட்டு விமான சேவை நாளை நள்ளிரவு முதல் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை மாலை 6 மணி முதல் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்துவருகின்ற போதிலும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
ஆகவே நோய் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில், நாளை மாலை 6 மணி முதல் வரும் 31ஆம் தேதி வரை அனைத்து மாவட்ட எல்லைகளையும் மூட வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு நடைமுறைக்கு வந்ததில் இருந்து பொதுவெளியில் 5 பேருக்கு மேல் ஒரு இடத்தில் கூடக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவவைத் தடுக்கும் வகையில் நாளை முதல் உள்நாட்டு விமான சேவை முடக்கப்படும் என்று விமானப் போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. இந்தத் தடை உத்தரவு நாளை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. இருப்பினும் சரக்குகளை கொண்டு செல்வதற்கான விமானங்கள் தொடர்ந்து இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. முன்பதிவு செய்த பயணிகளுக்கு கட்டணங்கள் எவ்வாறு திருப்பித் தரப்படும் என்பது போன்ற விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.