
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தற்போது சினிமாவை கடந்து அரசியல் ரீதியான பல்வேறு நகர்வுகளை முன்னெடுத்து வருகிறார். குறிப்பாக தன் திரைப்படங்களின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி மேடைகளில் பல்வேறு அரசியல் ரீதியான கருத்துக்களை வெளிப்படையாக பேசி, தான் அரசியலுக்கு வருவதையும் வெளிப்படுத்தி வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக அம்பேத்கருடைய பிறந்த நாள் வந்தபோதுகூட தமிழகம் முழுவதிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் நேரில் சென்று அம்பேத்கருடைய சிலைக்கு மரியாதை செலுத்த வேண்டும் என விஜய் சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. அந்த உத்தரவின்பேரில், பல்வேறு பகுதிகளிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் பேரணியாக சென்று அம்பேத்கரின் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
இதுபோன்ற நடவடிக்கைகள்யாவும், நடிகர் விஜய்யின் அரசியல் ரீதியான நுழைவை அறிவிக்கும் வகையில் அமைந்தன. இதன்பின்னரும்கூட நடிகர் விஜய் தனது விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளிடம் பல்வேறு கட்டமாக ரகசிய ஆலோசனை நடத்தி வருகிறார்.
மேலும் தமிழகம் முழுவதிலும் விஜய் மக்கள் இயக்கத்தினரின் விவரங்கள் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தொகுதியில் உள்ள வாக்காளர்கள் பட்டியல் உள்ளிட்ட விவரங்களை விஜய் மக்கள் இயக்கத்தினர் சேகரித்து கொடுக்கவும், விஜய் ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளார் என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் தான் ஜூன் 22 வர உள்ள நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ‘2024 பாராளுமன்றமே 2028ன் சட்டமன்றமே’ என்ற வாசகங்களுடன் ‘விரைவில் மதுரையில் மாநாடு’ என்று குறிப்பிட்டு, மதுரை முழுவதிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் சரா்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இப்போஸ்டர்களில் நடிகர் விஜய் மதுரையில் மாநாடு நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மதுரை நாடாளுமன்ற தொகுதியில் நடிகர் விஜய் போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பும் அவரது ரசிகர்கள் மற்றும் மக்கள் இயக்க உறுப்பினர்களிடையே எழுந்துள்ளது.
போலவே வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் தனித்து களம் காண்கின்றனரா, இல்லையெனில் ஏதேனும் அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளனரா என்று கேள்வியும் எழுந்துள்ளது.