செவிலியர்கள் பிரசவம் பார்த்ததால் உயிரிழந்த குழந்தை
ஈரோடு அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாமல் கர்ப்பிணிக்கு செவிலியர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். இதனால் பிறந்த சில நிமிடங்களில் குழந்தை இறந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருப்பூரை சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி கன்னியம்மாள். பிரசவத்திற்காக சொந்த ஊரான ஈரோட்டை அடுத்த திண்டலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று காலை பிரசவத்திற்காக கன்னியம்மாள் அதே பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் நேற்று இரவு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாமல் இருந்துள்ளனர். இதனால் செவிலியர் மட்டும் கன்னியம்மாளுக்கு மகப்பேறு சிகிச்சை அளித்துள்ளனர். இதில் கன்னியம்மாளுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் பிறந்த சில நிமிடங்களிலேயே குழந்தை உயிரிழந்தது.
குழந்தையின் உயிரிழப்புக்கு மருத்துவர்கள் இல்லாமல் செவிலியர்கள் சிகிச்சை அளித்ததே காரணம் என குற்றம்சாட்டிய கன்னியம்மாளின் உறவினர்கள், இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே கன்னியம்மாளுக்கு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.