‘திடீரென மயங்கினார் ஜெயலலிதா’ மருத்துவரின் திடுக்கிடும் வாக்குமூலம்!
மருத்துவமனை செல்வதற்கு 2 நாட்களுக்கு முன்னரே ஜெயலலிதாவிற்கு லேசான காய்ச்சல் இருந்ததாக மருத்துவர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுப்பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த ஆணையத்தில் சசிகலா உறவினரும், அப்பல்லோ மருத்துவருமான சிவக்குமார் 2-வது முறையாக இன்று ஆஜராகினார். இவரது மேற்பார்வையில் தான் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இதற்கு முன் ஜனவரி மாதம் 8 ஆம் தேதி ஆஜராகி விளக்கம் அளித்திருந்த இவர் இன்றைய விசாரணையின் போது பல தகவல்களை வாக்குமூலமாக அளித்துள்ளார்.
வாக்குமூலத்தின் போது பேசிய சிவக்குமார், “மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே ஜெயலலிதாவிற்கு லேசான காயச்சல் இருந்தது. வீட்டில் திடீரென அவர் மயக்கமடைந்த காரணத்தினால் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது நான் உடனிருந்தேன்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னதாக சரும பிரச்சனைக்காக இரண்டு வாரம் ஸ்டெராய்டு எடுத்துக்கொண்டார். ஆனால் ஸ்டெராய்டால் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்படவில்லை” என்று கூறினார். இந்த விசாரணையின்போது, செப்டம்பர் 26 ஆம் தேதி வரை அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த கேள்விகளுக்கு சிவக்குமார் பதிலளித்துள்ளார். மேலும் சிவக்குமாரிடம் விசாரணை தொடரும் என ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.