ஜெயலலிதா கைரேகையைப் பெற ரூ.5 லட்சம் வாங்கினாரா மருத்துவர் பாலாஜி?
ஜெயலலிதா கைரேகையைப் பெற அமைச்சர் விஜயபாஸ்கரிடம் இருந்து பணம் எதையும் தான் பெறவில்லை என அரசு மருத்துவர் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி இடைத்தேர்தலின் போது அப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கைரேகையை பெறுவதற்காக அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளரிடம் இருந்து அரசு மருத்துவர் பாலாஜி ரூ.5 லட்சம் பெற்றதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது.
இந்நிலையில் இந்த செய்தியை அரசு மருத்துவர் பாலாஜி மறுத்துள்ளார். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அவர், இந்த செய்திகள் அனைத்தும் பொய்யானவை. எவ்வித அடிப்படையும் இல்லாதவை என கூறியுள்ளார்.
விஜயபாஸ்கரின் உதவியாளரிடம் இருந்து பணம் பெற்று ஜெயலலிதாவுக்கு மருத்துவம் பார்க்க வந்த மருத்துவர்களின் ஓட்டல் கட்டணத்தை செலுத்தியதாக கூறப்பட்டதையும் அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். மருத்துவ கட்டணமாகவோ அல்லது மற்ற வகையிலோ நான் எந்தவொரு பணத்தையும் பெறவில்லை என தெரிவித்துள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக எந்த ஊடகத்திடமும் கருத்து தெரிவிக்கவில்லை என்றும் பாலாஜி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அவரிடமிருந்து தேர்தல் ஆவணத்தில் கைரேகையை பதிவு செய்தவர் பாலாஜி என்பது குறிப்பிடத்தக்கது.