
மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் திருச்சி, ஸ்ரீரங்கத்துக்கு வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”அரசாங்கத்தில் அமைச்சர் பொறுப்பில் இருப்பவர் சனாதனத்துக்கும், சனாதன தர்மத்துக்கும் விரோதமாகவே பேசிக் கொண்டிருக்கிறார். ஜாதி, மத வேறுபாடின்றி செயல்பட வேண்டிய அமைச்சர் ஒரு தர்மத்துக்கு விரோதமாக பேசுகிறார்.
அந்த அமைச்சரும், அரசும் நமக்குத் தேவையா? என்ற கேள்வி எழுகிறது.
சனாதன தர்மத்தை பற்றி பேசும் உதயநிதிக்கு கிறிஸ்தவர், இஸ்லாமிய மதத்தினரிடம், அந்த மதங்களில் தவறுகள் இருந்தால், அதை சுட்டிக்காட்டி, சரி செய்யுங்கள் என்று கூற தைரியம் இருக்கிறதா? சனாதன தர்மத்தை பற்றி பேசுபவர்கள், மழைக் காலத்தில் பறக்கும் ஈசலை போன்றவர்கள்.
ஈசலை எறுப்புகள் அடித்துச் செல்வது போல், அந்த கும்பலும் அடித்துச் செல்லப்படுவர். இவர்களை போன்ற அதர்மிகளை நாட்டை விட்டே வெளியேற்ற வேண்டும்.
நாட்டில் உள்ள 125 கோடி மக்களில் பெரும்பாலானவர்கள் ஹிந்து தர்மிகள் தான். சிறுபான்மை மக்களை தவிர்த்து, 91 சதவீதம் உள்ள ஹிந்து தர்மிகளை பற்றி பேசுவர்கள் இந்த நாட்டில் இருக்கக் கூடாது. இருக்க விடக் கூடாது. தர்மத்துக்காக பாடுபட்டவர்கள் சிலர்; தர்மத்தின் பேரைச் சொல்லி சம்பாதித்தவர்கள் சிலர். இவர்கள் தர்மத்தின் பேரைச் சொல்லி சம்பாதிக்கின்றனர்.
ராமானுஜர், 1,000 ஆண்டுகளுக்கு முன்பே அனைவரையும் ஆலய பிரவேஷம், கோவில் பூஜை போன்றவற்றில் பங்கேற்க வைத்துள்ளார். நம்மாழ்வார் சன்னதிகளில், பிராமணர் அல்லாத சிறுபான்மை என்று சொல்லக்கூடிய சமூகத்தினர், பறையர், தாழ்த்தப்பட்டவர்கள் அர்ச்சகர்களாக உள்ளனர். அரசாங்கமும், அரசாங்கத்தில் இருப்பவர்களும், ஜாதி, மதம் பற்றி பேசக் கூடாது. லோக்சபா தேர்தல் வரப்போவதால், ஓட்டுக்காக, மதப் பிரச்னைகளை தூண்டி விடுகின்றனர். முதலில், தி.மு.க.,வினரின் கொள்கைகளை வரையறை செய்து கொண்டு, நம்முடைய கலாச்சாரத்தைப் பற்றி பேச வேண்டும்.
வடமாநில சாமியார் ஒருவர், உதயநிதி தலையை சீவினால் 10 கோடி தருவதாக கூறியிருப்பது அதிகம். ஈசலை போன்றவர்கள் தானாகவே உதிர்ந்து விடுவர். பெற்ற தாயை கேவலமாக திட்டினாலோ, அடித்தாலோ பார்த்துக் கொண்டிருப்போமா? சனாதன தர்மம் என்பது நம் நாடு; நாடு நம்முடைய தாய். அந்த சூழலை ஏற்படுத்தியுள்ளனர். காங்கிரஸ் கட்சியினர் உட்பட அனைவரும் 'இந்தியா ஜெய்' என்றா கூறுகின்றனர். வந்தே மாதரம் கீதத்திலும், பாரதம் என்றுதான் உள்ளது. நமக்கு இப்போது, இது புதிதாகத் தெரிகிறது அவ்ளோ தான்.
அறநிலையத் துறை பணத்தில், கோவில் தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. அரசியல் வேண்டாம். ஆனாலும், ஒரு மனுஷனுக்கு ஒரு சரீரம். கண்கள், காதுகள், கைகள், கால்கள் போன்றவை இரண்டு உள்ளன. அதில் ஒன்று போதும் என்று சொல்லிவிட முடியுமா? மாநிலங்களை நாடுகளாக பிரித்துக் கொடுங்கள் என்று சிலர் கேட்கின்றனர். அதை செய்ய முடியாது.
சனாதனம் என்பது பழமையான நடைமுறை. ஜாதியை பற்றி சனாதனத்தில் எங்கும் இல்லை. அதை முழுமையாக படித்து விட்டு விவாதிக்க வந்தால், பேசலாம். முழுமையாக தெரிந்து கொள்ளாமல் பேசுபவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இங்குள்ள எல்லா மதங்களும், 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சனாதன தர்மத்தின் அடிப்படையில் இருந்து வந்தவை தான். அதில் சில மாற்றங்கள் வந்து கொண்டிருக்கும் என தெரிவித்தார்.