"மக்களின் மனுக்களை வெறும் காகிதமாய் பார்க்காதீர்கள்"- அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

"மக்களின் மனுக்களை வெறும் காகிதமாய் பார்க்காதீர்கள்"- அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்
"மக்களின் மனுக்களை வெறும் காகிதமாய் பார்க்காதீர்கள்"- அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

மக்கள் வழங்கும் மனுக்களை வெறும் காகிதமாக பார்க்காமல் அவர்களது வாழ்வாதாரமாக கருத வேண்டும் என்றும், பத்திரிகை, ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை அரசு அதிகாரிகள் புறந்தள்ளக்கூடாது என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

சேலத்தில் இரண்டுநாட்கள் பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டாம் நாளான இன்று வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய, சேலம் மண்டல அளவிலான இந்த ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர்கள் நேரு, பன்னீர்செல்வம், காந்தி, உதயநிதி, மதிவேந்தன் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகம், நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரேயா பி சிங், தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சி தலைவர் தீபக் ஜேக்கப் உள்பட வருவாய் அலுவலர்கள், கோட்டாட்சியர்கள் உள்ளிட்டோர் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

சேலம் மண்டல அளவில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்ட பணிகள் குறித்து மாவட்ட வாரியாக முதலமைச்சர் ஆய்வு நடத்தினார். மேலும் பல்வேறு துறைகளின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள், செலவினங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதைத்தவிர முதலமைச்சரின் சிறப்பு திட்டங்களான நமக்கு நாமே திட்டம், நான் முதல்வன், காலை உணவு திட்டம், மக்களை தேடி மருத்துவம், பெண்களுக்கான இலவச பேருந்து பயணத்திட்டம் ஆகியவற்றில் பயனாளிகள் விவரம், தற்போதைய நிலவரம் என ஒவ்வொரு திட்டங்கள் குறித்தும், அதன் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பற்றியும் முதலமைச்சர் கேட்டறிந்தார்.

ஆய்வுக்குப் பின்னர் அதிகாரிகளிடையே உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், மக்களாட்சி தத்துவத்தில் நம்பிக்கை வைத்துள்ள இந்த அரசு, மக்களின் குறைகளை தீர்ப்பதற்கும் முக்கியத்துவம் அளிப்பதை உணர்ந்து அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும். தொடர் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். மக்கள் கொடுக்கும் மனுக்களை வெறும் காகிதமாக பார்க்காமல் அவர்களின் வாழ்வாதாரமாக கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராம மக்களுக்கான அடிப்படை வசதிகளை முறையாக தரமாக செய்து தர வேண்டும். அதிகாரிகள்தான் அரசின் முகமாக மாவட்டங்களில் பணியாற்றுகிறார்கள். அதிகாரிகள் கடினமாக உழைத்தால் பொதுமக்களுக்கு பயன் கிடைக்கும்.

வேளாண் உற்பத்தி மதிப்பு கூட்டல் தொடர்பாக விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்களை சந்தித்து பேசினேன். விவசாயிகள் வருமானம் உயர்த்தப்பட வேண்டும் என்பது அரசின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். விவசாயிகள் கோரிக்கைக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். நகர்ப்புற பகுதி மக்களுக்கு, அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். வேகமாக வளரும் சேலம், ஓசூர் போன்ற நகரங்களில் குப்பைகளை விரைந்து அகற்றுதல், பழுதான சாலைகளை சீர் செய்தல் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயனடைவார்கள்.



ஆதிதிராவிடர் உள்பட விளிம்பு நிலை மக்களுக்கான நடவடிக்கைகளுக்கு மிகுந்து முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஊடகங்களில் வெளியாகும் குறை தொடர்பான செய்திகளை கண்டறிந்து, அவற்றை தீர்ப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். பல்வேறு கோரிக்கைகளுக்காக வரும் பொதுமக்களை கனிவாக நடத்த வேண்டும். வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வருவோருக்கு, உதவ ஆட்களை நியமிக்க வேண்டும். காவல்நிலையத்தில் வரவேற்பு அலுவலர் இருப்பது பாராட்டுக்குரியது. அரசு திட்டங்களை காலத்தே கொண்டு சேர்க்க செயலாற்ற வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com