’10 நிமிடத்தில் அப்டேட் செய்யாவிட்டால்..’ என வரும் லிங்கை தொடவேண்டாம்- போலீசார் எச்சரிக்கை
10 நிமிடத்தில் அப்டேட் செய்யவில்லையென்றால் வங்கிக் கணக்கு முடக்கப்படும் என செல்போனிற்கு வரும் மெசேஜ் லிங்கை தொடவேண்டாம் என சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபகாலமாக அங்கீகரிக்கப்பட்ட வங்கி மூலமாக வருவதுபோல் ஒரு லிங்க் மெசெஜ் அனைத்து செல்போன் எண்ணிற்கும் வருகிறது. அந்த மெசேஜில் இந்த லிங்கை 10 நிமிடத்திற்குள் அழுத்தி உங்களது Kyc/pan card/ aadhar card விவரங்களை பதிவிட வேண்டும் எனவும் இல்லையென்றால் உங்களது வங்கிக் கணக்கு முடக்கப்படும் என தெரிவித்துள்ளது.
இதனை நம்பி பொதுமக்கள் பலர் அந்த லிங்க் மூலமாக தங்களது விவரங்களை பதிவு செய்வதாகவும், அந்த சமயத்தில் அதாவது 2 அல்லது 3 நிமிடங்களில் குறிப்பிட்ட வங்கி கணக்கின் தனிப்பட்ட விவரங்களை மோசடி கும்பல் திருடி உடனடியாக ஏடிஎம் மூலமாகவும், ஷாப்பிங் மூலமாகவும் பணத்தை திருடி வருகின்றனர்.
இது போல் வரக்கூடிய மெசேஜை பொதுமக்கள் ஒருவரும் நம்பவேண்டாம் எனவும் வங்கியிலிருந்து இது போன்ற மெசேஜ் அனுப்பமாட்டார்கள் என சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளனர்.