விஜயகாந்த் பற்றிய வதந்திகளை நம்பவேண்டாம்: தேமுதிக
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை தொடர்பான வதந்திகளை யாரும் நம்பவேண்டாம் என்று தேமுதிக தெரிவித்துள்ளது.
தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த், உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அவ்வபோது சிகிச்சை பெற்று வருகிறார். அதேபோல், வெளிநாடுகளுக்குச் சென்றும் சிகிச்சை எடுத்து வருகிறார். சமீபத்தில் கூட அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று இருந்தார். சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வதால் வழியனுப்புவதற்காக கழக நிர்வாகிகள், தொண்டர்கள் யாரும் வர வேண்டும் என்றும் தேமுதிக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்நிலையில், சென்னை தனியார் மருத்துவமனையில் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு இன்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுதொடர்பாக அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சதீஷ், “மருத்துவமனையில் விஜயகாந்துக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை தான். வழக்கமான மருத்துவ பரிசோதனை முடிந்ததும் நாளை காலை விஜயகாந்த் வீடு திரும்புவார்” என தெரிவித்தார்.
இதுதொடர்பாக தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர், பொதுச் செயலாளர் கேப்டன் விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார். வதந்திகளை யாரும் நம்ப வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.