நீதிமன்ற உத்தரவையடுத்து செவிலியர்கள் போராட்டம் வாபஸ்
மூன்றாவது நாளாக சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் நீடித்து வந்த செவிலியர்களின் போராட்டம் நீதிமன்ற உத்தரவை அடுத்தும், அதிகாரிகள் உறுதியளித்தையடுத்தும் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர் கடந்த 3 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அமர்வின் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஊதியம் போதவில்லை என்றால் வேலையை விடுங்கள் என்று கூறிய நீதிபதிகள், இதனால் யார் பாதிக்கப்படுவார்கள் என்று தெரியுமா என்று கேள்வி எழுப்பினர்.
அரசு மருத்துவமனையை நாடும் ஏழை, நடுத்தர மக்கள்தான் இந்த போராட்டத்தால் பாதிக்கப்படுவார்கள் என்று கூறிய நீதிபதிகள், முதலில் போராட்டத்தை கைவிட்டு பின்னர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறினர். போராட்டத்தை கைவிடாவிட்டால் அவர்கள் தரப்பு வாதத்தை கேட்க முடியாது என்று நீதிபதிகள் கண்டிப்புடன் கூறினர். முறையாக நோட்டீஸ் கொடுத்து, சம வேலை, சம ஊதியம் கேட்பதாக செவிலியர் தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது, சேவை என்பதே நோக்கமாக இருக்க வேண்டும் என்றும், போராட்டத்தை கைவிட்டால் கோரிக்கைகள் தொடர்பாக அரசுக்கு அறிவுறுத்த தயாராக இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், இரு சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தடை விதித்தனர். நாளை செவிலியர் அனைவரும் பணியில் இருக்க வேண்டும் என்றும், போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும், நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டனர். நீதிமன்ற உத்தரவை அடுத்து டிஎம்ஸ் வளாகத்தில் போராட்டம் செய்து வந்த செவிலியர்கள் தங்கள் போராட்டத்தை திரும்பப் பெற்றனர். அத்துடன் நீதிமன்ற தீர்ப்பை மதித்தும், மக்களுக்காகவும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்வதாக செவிலியர்கள் தெரிவித்துள்ளனர்.