நான் இ-பாஸ் இல்லாமல் சென்றிருந்தால் என் மீது அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?: உதயநிதி
திமுக தேர்தல் தேர்தல் வேலைகளை துவங்கக்கூடாது என்பதற்காகவே இ-பாஸ் முறையை அரசு நீக்காமல் இருப்பதாக அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணாநகரில் தாண்டமுத்து என்ற ஆட்டோ ஓட்டுநர், தனது ஆட்டோவிற்கு ஆர்.டி.ஓ அலுவலக அதிகாரிகள் எஃப்சி செய்வதில் இழுத்தடித்ததாக கூறி விரக்தி அடைந்தார். அத்துடன் அவர் மன உளைச்சலில் தனது ஆட்டோவை கொளுத்திவிட்டு தற்கொலைக்கு முயன்றார். இந்த சம்பவம் செய்திகளில் வெளியாகின.
இந்நிலையில் ஆட்டோ ஓட்டுநர் தாண்டமுத்து புது ஆட்டோ வாங்கிக் கொள்வதற்காக திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் காசோலை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இ-பாஸ் முறையில் முறைகேடுகள் இருப்பதாகவும், அதுதொடர்பாக விசாரிக்க வேண்டும் எனவும் கூறினார்.
அத்துடன், “நான் கூட இ-பாஸ் எடுக்காமல் தூத்துக்குடி சென்றதாக சொல்கிறார்கள். அப்படி நான் சென்றிருந்தால் என் மீது ஏன் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை ? அப்படி என்மீது நடவடிக்கை எடுக்க வழக்குத் தொடர்ந்தாவது, இ-பாஸ் குறித்த விசாரணையில் உண்மைகள் வெளிவரட்டுமே. நாங்கள் தேர்தல் வேலைகளை துவங்கக் கூடாது என்பதற்காக தான் இ-பாஸ் நடைமுறையை நீக்காமல் உள்ளனர்” என்றார்.

