EXCLUSIVE: “கூட்டாட்சி தத்துவத்தை பாஜக அரசு மதிப்பதில்லை”-திமுக மகளிர் அணி மாநாட்டில் சுப்ரியா சுலே!

“இப்படி மோசமாக அரசியல் செய்வதை பார்த்து கவலையாக உள்ளது. கூட்டாட்சி தத்துவத்தை மத்திய பாஜக அரசு மதிப்பதாக தெரியவில்லை“ சுப்ரியா சுலே NCP எம்.பி.
சுப்ரியா சுலே
சுப்ரியா சுலேpt web

சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் திமுக மகளிர் அணி சார்பில் மகளிர் உரிமை மாநாடு நடைபெற உள்ளது. இந்தியாவின் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைசிறந்த பெண் ஆளுமைகள் இம்மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

மகளிர் இடஒதுக்கீட்டுச் சட்டம் நினவாகவும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் ஒரு தளமாக இம்மாநாடு அமையும் என திமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநாட்டிற்கு தலைமை ஏற்க உள்ள நிலையில் திமுக எம்பி கனிமொழி முன்னிலை வகிக்க உள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, பீகார் அமைச்சர் லெஷி சிங், காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முஃப்தி, தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவர் சுப்ரியா சுலே உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். சமாஜ்வாதி கட்சியின் டிம்பிள் யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ராஜா, மார்க்சிஸ்ட் கட்சியின் சுபாஷினி அலி, திரிணமூல் காங்கிரசின் சுஷ்மிதா தேவ், ஆம்ஆத்மி கட்சியின் ராக்கி பிட்லன் உள்ளிட்டோரும் இம்மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில் மாநாடு குறித்து பேசிய திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி, திமுக மகளிரணி மாநாடு, நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்ட பிரச்சாரமாக அமையும் என தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்ட பிரச்சாரமாக அமையும். நாட்டில் உள்ள மகளிருக்கான பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும். திமுக மகளிரணி மாநாடு அரசியல் பேசப்படும் கூட்டமாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்துள்ள தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலேவிடம் புதிய தலைமுறை சார்பாக சில கேள்விகளை எழுப்பினோம்.

திமுகவின் மகளிர் உரிமை மாநாட்டில் கலந்துகொள்வதை எவ்வாறு உணருகிறீர்கள்?

மகளிர் உரிமை மாநாட்டில் கலந்துகொள்ள என்னை அழைத்துள்ள திமுக நண்பர்களுக்கு எனது நன்றிகள். சென்னை வந்ததில் மகிழ்ச்சியாக உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு பற்றி உங்கள் கருத்து?

பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை நாங்கள் வரவேற்கிறோம். எப்போது நிறைவேற்றப்படும் என்ற தேதி குறித்த விவரங்கள் எதுவும் அதில் இடம்பெறவில்லை. மகளிர் இட ஒதுக்கீட்டை எப்போது அமல்படுத்தப்போகிறார்கள் என்பது தெரியாததால் ஏமாற்றம் அடைந்துள்ளோம்.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பாஜக இடையூறு தருவதாக தெரிவிக்கப்படுவது குறித்து உங்கள் கருத்து?

இப்படி மோசமாக அரசியல் செய்வதை பார்த்து கவலையாக உள்ளது. கூட்டாட்சி தத்துவத்தை மத்திய பாஜக அரசு மதிப்பதாக தெரியவில்லை. மத்திய அரசுக்கு எதிராக பேசும் எதிர்க்கட்சித் தலைவர்களை ஒடுக்க, சி. பி.ஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகள் மூர்க்கத்தனமாக பயன்படுத்தப்படுகின்றன. எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு குறைந்த நிதி மட்டுமே ஒதுக்கப்படுகிறது.

NDA கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது பற்றி?

அதிமுக பாஜக கூட்டணி முறிவு எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை. பாஜக எந்த கட்சியுடனும் நல்லுறவு வைத்திருக்காது.

இண்டியா கூட்டணி ஓ.பி.சி இட ஒதுக்கீட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பது பற்றி?

அனைவரையும் உள்ளடக்கிய நாட்டை உருவாக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். நாட்டை உயர்த்த வேண்டும் என்றால் அனைத்து மக்களும் சமமாக முன்னேற வேண்டும்.

2024 பொதுத் தேர்தலுக்கான உங்கள் யுக்தி என்ன ?

நாங்கள் எங்கள் யுக்தியை எதற்கு சொல்ல வேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com