"வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள்" - திமுக மீது இபிஎஸ் குற்றச்சாட்டு

"வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள்" - திமுக மீது இபிஎஸ் குற்றச்சாட்டு
"வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள்" - திமுக மீது இபிஎஸ் குற்றச்சாட்டு

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையத்தின் ஒத்துழைப்போடு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் செய்து திமுக வெற்றி பெற்றுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை சந்தித்த பின் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது...

எதிர்கட்சியை பழி வாங்கும் நடவடிக்கையாக அமைச்சர் ஜெயகுமார் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எதிர்க்கட்சியை நசுக்கும் முயற்சியில் முதல்வர் ஸ்டாலின் செயல்படுகிறார், இது சரியல்ல, தானும் முதல்வராக இருந்தவன், எங்களது காலத்தில் எப்படி நடந்தோம் என்பதை எண்ணி பார்க்க வேண்டும்.

.ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் ஒரு வண்டிக்கு சக்கரம் போன்றது ஆளும் கட்சி செய்யும் தவறை எதிர்க்கட்சி சுட்டிக்காட்டுவது ஜனநாயக மரபு. 9 மாத ஆட்சியில் அடித்த கொள்ளை பணத்தை மக்களுக்கு கொடுத்தும், கள்ள ஓட்டு போட்டும் திமுக வெற்றி பெற்றுள்ளது. ஜனநாயக முறைப்படி தேர்தலில் திமுக வெற்றி பெறவில்லை தேர்தல் ஜனநாயக படுகொலை செய்யப்பட்டுள்ளது.

காவல்துறை ஒத்துழைப்போடு திமுகவுக்கு தேர்தல் ஆணையம் கைப்பாவையாக செயல்பட்டுள்ளது காவல்துறை திமுக அரசுக்கு ஏவல் துறையாக செயல்பட்டுள்ளது. ஜெயக்குமார் மீது வேண்டுமென்றே பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. கள்ள ஓட்டுப் போட முயன்றவர் மீது 10-க்கும் மேற்பட்ட வழக்குகளும், குண்டர் சட்டமும் உள்ளதாக தகவல் வந்துள்ளது சில வழக்குகளில் தண்டனை பெற்று ஜாமீன் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

திமுக எம்பியே அவருக்கு வாதாடுகிறார். குண்டர்களையும், ரவுடிகளையும் வைத்து தான் திமுக தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது தேர்தலுக்கு முன்பாகவே ரவுடிகளை கைது செய்ததாக சென்னை காவல் ஆணையர் கூறினார், ஆனால் அப்படி கைது செய்திருந்தால் இந்த பிரச்னை வந்திருக்காது. வாக்குச்சாவடியில் கள்ள ஒட்டு போட முயன்றதாக தேர்தல் அலுவலரே பேட்டி கொடுத்துள்ளார், இருப்பினும் எங்களது வாதத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை.

கள்ள ஓட்டுப் போட முயன்றவரை பிடித்து காவல் துறையில் ஒப்படைத்தும், அவர் அதிமுகவினரை கல்லால் தாக்கினார். அப்படிப்பட்ட நபருக்கு திமுக ஆதரவளிக்கிறது. ஜனநாய குரல்வளையை ஸ்டாலின் அரசு நசுக்குகிறது. அதிமுக ஆட்சியில் சபாநாயகரை இழுத்து கீழே தள்ளி இருக்கையில் அமர்ந்தவர்கள் திமுகவினர்; சட்டத்தை மதிக்காத கட்சி தான் திமுக, அதன் தலைவர் தான் ஸ்டாலின்;. தேர்தல் முறைகேடுகள் குறித்து சட்டரீதியாக எதிர்கொள்ளப்படும்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சட்ட மன்றத்தில் பெண் என்றும் பாராமல் தாக்கியவர்கள் திமுகவினர்;. நியாயம், நேர்மை, தர்மம் இவைகளை திமுகவினரிடம் எதிர்பார்க்க முடியாது. திமுக ஆட்சிக்கு வந்தாலே அராஜகம் தான் இருக்கும், இப்போதும் அராஜகம் அரங்கேறி வருகிறது. எதிர்க் கட்சியை ஒடுக்குவது, எதிர்க் கட்சியை பழிவாங்குவது, எதிர்க் கட்சியே இருக்க வேண்டாம் என நினைப்பவர் தான் ஸ்டாலின், அது ஒருபோதும் நடக்காது; தொண்டர்கள் இருக்கும் வரை அதிமுகவை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது.

மக்கள் அனைவரும் இரட்டை இலைக்க வாக்களித்ததாக கூறுகின்றனர், வாக்கு இயந்திரத்தில் முறைகேடு செய்திருப்பதாக தகவல்கள் வருகின்றன, நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம், தேர்தல் ஆணையம், காவல்துறை உதவியுடன் வாக்கு இயந்திரத்தில் முறைகேடு செய்து திமுக வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com