ஸ்டெர்லைட்டுக்கு அனுமதி அளித்தது திமுகதான் -ஜெயக்குமார்
தூத்துக்குடி மக்களுக்கு துரோகம் இழைத்தது திமுகதான் என பேரவையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.
இன்று சட்டமன்றத்தில் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி அளித்தது திமுகதான் என ஆணித்தரமாக முதலமைச்சர் தோலுரித்து காட்டியுள்ளதாக தெரிவித்தார். திமுக ஆட்சியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப்பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது என்று கூறினார். மேலும் சட்ட போராட்டம் நடத்தி காவிரி நீரை பெற்றுள்ளோம் என கூறிய ஜெயக்குமார் எப்படியாவது தமிழக அரசை கவிழ்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் திமுக இருப்பதாக சாடினார்.
நேற்றைய தினம் முதலமைச்சர் விளக்கம் அளித்த பிறகும் சட்டமன்றத்தில் ஜனநாயகம் இல்லை என்று சொல்வது சாத்தான் வேதம் ஓதுவது போல உள்ளது என தெரிவித்தார். 2006ஆம் ஆண்டு அதிமுகவினரை ஒட்டுமொத்தமாக பேரவையில் இருந்து வெளியேற்றி திமுகதான் ஜனநாயகத்தை கேலி கூத்தாக்கியதாக கூறினார். திமுக ஆட்சியில் சபாநாயகர் ஆவுடையப்பன் மரபுகளை குழித்தோண்டி புதைத்தார் என ஜெயக்குமார் குற்றம்சாட்டினார். தற்போதைய சபாநாயகர் தனபால் சாந்த சொரூபமாக உள்ளார் என்றும் கூறினார்.