2026 தேர்தல்: ஆரம்பிக்கிறது திமுகவின் ஆட்டம்.. 4 நாளில் கூட்டணி பேச்சு ஆரம்பம்?
2026 தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையை திமுக பிப்ரவரி 23 முதல் தொடங்குகிறது. முதலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்குடன் பேச்சு நடத்த திட்டமிட்டுள்ளது. முஸ்லிம் லீக் 5 தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது. மற்ற கூட்டணிக் கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும் என தகவல்.
2026 தேர்தல் கூட்டணி குறித்து, வரும் 23ஆம் தேதி திங்கள் கிழமை முதல் பேச்சுவார்த்தையை தொடங்க திமுக திட்டமிட்டுள்ளது. அதன்படி, வரும் 22 ஆம் தேதி தேர்தல் பேச்சுவார்த்தைக்கான குழுவை அறிவிக்கும் திமுக, தங்களது தொடர் மரபு படி, முதலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை அழைத்து பேசவிருக்கிறது. அக்கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் உள்ளிட்ட ஐவர் குழு, திமுக தேர்தல் குழுவுடன் பேசவிருப்பதாக சொல்லப்படுகிறது.
2021இல் சிதம்பரம், கடையநல்லூர், வாணியம்பாடி என 3 தொகுதிகளில் போட்டியிட்ட முஸ்லிம் லீக், அனைத்திலும் வெற்றி வாய்ப்பை இழந்தது. இந்த நிலையில், தற்போது 5 தொகுதிகளில் போட்டியிட முஸ்லிம் லீக் விரும்புவதாகத் தெரிகிறது. முஸ்லிம் லீக்கை தொடர்ந்து, மற்ற கூட்டணிக் கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தும் என தகவல் வெளியாகியுள்ளது.

