முதல்வர் விஜயின் தாக்கம் எதிரொலி.. பலன்கொடுக்குமா GenZ DMK Meetup ? இளம் தலைமுறை நோக்கி திமுக
Gen Z வாக்காளர்களின் ஆதரவால் முதல்வர் பதவியை கைப்பற்றிய நிலையில், இளைஞர்களை இழந்துவிட்டதாக விமர்சனம் கேட்கும் திமுக, ‘Gen Z DMK Meetup’ மூலம் இளம் தலைமுறையினரிடம் மீண்டும் செல்வாக்கை உருவாக்க முயல்கிறது. இந்த முயற்சி எதிர்கால வாக்கு வங்கியை மாற்றுமா என்ற கேள்வி எழுகிறது.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் புதிதாக தொடங்கப்பட்ட கட்சியான நடிகர் விஜயின் தவெக, திமுக - அதிமுக ஆகிய ஆண்ட கட்சிகளை வீழ்த்தி தனிப்பெரும் கட்சியாக உருவானது. அதனைத் தொடர்ந்து பிற கட்சிகளின் ஆதரவை பெற்று விஜய் தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். விஜயின் இந்த வெற்றிக்கு Gen Z (ஜென் ஜி) என அழைக்கப்படும் இளம் தலைமுறையினரே முக்கிய காரணமாக இருப்பதாக கூறப்பட்டது. மேலும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் இளம் தலைமுறையினரிடமிருந்து விலகி செல்வதாகவும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் எழுந்தது.
அதனைத் தொடர்ந்து இளம் தலைமுறையினரிடம் கட்சிகளை கொண்டுசெல்ல கட்சி நிர்வாகிகளுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதே போல இளம் தலைமுறையினரை குறிவைத்து Gen Z (ஜென் ஜி)திமுக என்னும் தலைப்பில் திமுக ஆதரவாளர்கள் நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டனர்.
அந்த வகையில் முதலில் இதற்கான முதல் நிகழ்ச்சி கொளத்தூரில் நடைபெறுவதாக இருந்த நிலையில், அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதனால் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் 500க்கும் அதிகமான இளம் தலைமுறையினர் கலந்துகொண்ட நிலையில், அவர்களுக்கு திமுக கொள்கைகள் குறித்து விளக்கப்பட்டதோடு, பிற இளம் தலைமுறையினரிடம் திமுகவை எப்படி கொண்டுசெல்வது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த நிகழ்வு அடுத்தகட்டமாக மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும் என திமுக நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

