“மீண்டும் பெண் சிசுக் கொலை தலைதூக்குவது வேதனையளிக்கிறது” - ஸ்டாலின்

“மீண்டும் பெண் சிசுக் கொலை தலைதூக்குவது வேதனையளிக்கிறது” - ஸ்டாலின்

“மீண்டும் பெண் சிசுக் கொலை தலைதூக்குவது வேதனையளிக்கிறது” - ஸ்டாலின்
Published on

மீண்டும் பெண் சிசுக் கொலை தலைதூக்குவது வேதனையளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்துள்ள புள்ளநேரியை சேர்ந்த தம்பதி வைரமுருகன் மற்றும் சௌமியா. இவர்களுக்கு ஏற்கெனவே இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2-ஆம் தேதி அக்குழந்தை உயிரிழந்ததாகக் கூறி, பெற்றோர் குழந்தையை வீட்டின் முன்பு உள்ள வேப்ப மரத்தின் அருகே புதைத்துள்ளனர்.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் கேட்டபோது உடல் நலக்குறைவு காரணமாக குழந்தை இறந்துவிட்டதால் புதைத்து விட்டதாக பெற்றோர் கூறியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த ஊர்மக்கள் செக்கானூரணி காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பின்னர் இது தொடர்பாக செக்கானூரணி போலீசார் நடத்திய விசாரணையில், 30 நாள் ஆன பெண் சிசுவை பெற்றோர்களே கொலை செய்தது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து குழந்தையின் தந்தை வைரமுருகன் மற்றும் தாய் சௌமியா மற்றும் குழந்தையின் தாத்தா சிங்கத்தேவர் ஆகிய 3 பேர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களைக் கைது செய்தனர். விசாரணையில், பெற்றோர் எருக்கம்பால் கொடுத்து சிசுவை கொலை செய்தது தெரியவந்தது.

இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் பெண் சிசுக் கொலை குறித்து கவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ஃபேஸ்புக் பக்கத்தில், “பெண்மையைப் போற்றும் தமிழகத்தின் பண்பாட்டுப் பெருமைக்கு அவமானமாக மீண்டும் பெண் சிசுக் கொலை தலைதூக்குவது வேதனையளிக்கிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி செக்கானூரணி அருகே புள்ளநேரி கிராமத்தில் இரண்டாவதாகப் பிறந்த பெண்குழந்தையைப் பெற்றோரே கள்ளிப்பால் ஊற்றிக் கொன்று புதைத்திருப்பது இதயம் உள்ளோர் அனைவரையும் பதற வைக்கிறது.

கண்டனத்திற்குரிய இந்தச் செயலில் ஈடுபட்டோர் - துணை நின்றோர் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். பொள்ளாச்சியில் இளம்பெண்கள் மீதான பாலியல் வன்முறை, உசிலம்பட்டி அருகே பெண் சிசுக் கொலை எனத் தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற மாநிலமாகி வரும் நிலையில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் கொண்டாடும் ஆட்சியாளர்கள் வெறும் ஏட்டளவில் இல்லாமல் நடைமுறையில் பெண் சிசுக்களைப் பாதுகாத்திட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com