ஸ்டாலின் - இண்டியா கூட்டணித் தலைவர்கள்.. தோல்வியில் முடிந்த சந்திப்பு! ராகுல் சொன்னது என்ன?
நாளை (நவம்பர் 30) நடைபெறவுள்ள நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தின் போது, மத்திய பாஜக அரசு கொண்டுவரவுள்ள தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரளிக்கவிருப்பதாக திமுக தெரிவித்திருக்கிறது. ஏற்கனவே, நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட இந்த மசோதா தோல்வியைத் தழுவியிருந்த நிலையில், மக்களவையில் 22 உறுப்பினர்களைக் கொண்ட திமுக இந்த மசோதாவை ஆதரிக்கும் பட்சத்தில் தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். இதற்கிடையில், இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், திமுகவின் முடிவை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை வைத்து வருகின்றன.
அதன் ஒருபகுதியாக, ராகுல்காந்தி, சோனியாகாந்தி, மல்லிகார்ஜுனா கார்கே, மம்தா பானர்ஜி, எம்.ஏ. பேபி உள்ளிட்ட இண்டியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் கர்நாடகா, கேரளா, தெலங்கானா முதல்வர்கள் இன்று சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினர். 1 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்தச் சந்திப்பில் மசோதாவை எதிர்க்க வேண்டும் என ஸ்டாலிடனை வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்தச்சூழலில் தான், இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துள்ள ஸ்டாலின், மசோதாவுக்கு ஆதரவு நிலைப்பாட்டில் திமுக உறுதியாக உள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ”தொகுதி மறுவரையறை மசோதா தோற்றால் தமிழகத்தின் குறைந்தபட்ச பாதுகாப்பை இழந்துவிடுவோம். ஜனவரிக்கு பின் தொகுதி மறுவரையறை மசோதா வந்தால் தென் மாநிலங்கள் வஞ்சிக்கப்படும். 1971 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை வந்தால் தொகுதி எண்ணிக்கை உயரும்; தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிப்பதை தவிர நமக்கு வேறு வழி இல்லை. இன்று சந்தித்த இண்டியா கூட்டணி தலைவர்களிடம் மாற்று யோசனை இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துள்ள ராகுல்காந்தி, ”தொகுதி மறுவரையறை குறித்த எங்களின் பார்வையை மு.க.ஸ்டாலினிடம் விளக்கினோம்; தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறினால் தென் மாநிலங்களையும் பாதிக்கும் என்றோம். தொகுதி மறுவரையறை மசோதா இந்தியாவின் அரசமைப்பை முற்றிலுமாக மாற்றிவிடும். தமிழ்நாட்டின் உரிமைகளையும் நலன்களையும் உறுதியாக பாதுகாக்கக் கூடியவர் மு.க.ஸ்டாலின். பாஜக அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவை மு.க.ஸ்டாலின் நிராகரிக்க வேண்டும் தமிழ் மொழி, கலாச்சாரத்தை ஒழிக்க நினைக்கும் ஆர்எஸ்எஸ், பாஜகவுக்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது; தமிழையும் தமிழ் கலாச்சாரத்தையும் ஆர்எஸ்எஸ் எதிர்க்கிறது.” எனத் தெரிவித்துள்ளார்.

