திருவாரூரில் பேரூராட்சி, நகராட்சி மன்ற தலைமை பதவிகளை முழுமையாக கைப்பற்றியது திமுக!

திருவாரூரில் பேரூராட்சி, நகராட்சி மன்ற தலைமை பதவிகளை முழுமையாக கைப்பற்றியது திமுக!
திருவாரூரில் பேரூராட்சி, நகராட்சி மன்ற தலைமை பதவிகளை முழுமையாக கைப்பற்றியது திமுக!

திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 7 பேரூராட்சிகளுக்கும் 4 நகராட்சிகளுக்கும் தலைவர் துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கும் மறைமுக தேர்தல் நடைபெற்றது. கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வார்டு கவுன்சிலர்கள் பங்கேற்க, இந்த மறைமுக தேர்தல் இன்று நடைபெற்றது.

இத்தேர்தலில் முடிவில்,

* திருவாரூர் நகராட்சி - புவன பிரியா (திமுக) திருவாரூர் நகர மன்றத் தலைவர்.
* பேரளம் பேரூராட்சி - கீதா (திமுக) பேரூராட்சி தலைவர்.
* நன்னிலம் பேரூராட்சி - ராஜசேகரன் (திமுக) பேரூராட்சி தலைவர்.
* குடவாசல் பேரூராட்சி - மகாலட்சுமி (திமுக) பேரூராட்சி தலைவர்.
* வலங்கைமான் பேரூராட்சி - சர்மிளா (திமுக) பேரூராட்சி தலைவர்
* கொரடாச்சேரி பேரூராட்சி - கலைச்செல்வி (திமுக) பேரூராட்சி தலைவர்.
* முத்துப்பேட்டை பேரூராட்சி - மும்தாஜ் பேகம் (திமுக) பேரூராட்சி தலைவர்
* கூத்தாநல்லூர் நகராட்சி - பாத்திமா பஷீரா (திமுக) நகராட்சித் தலைவர்

ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதேபோல மன்னை நகர மன்றத் தலைவராக சோழராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்படியாக ஒட்டு மொத்தமாக திருவாரூர் மாவட்டத்தில் (7 பேரூராட்சிகளிலும் 4 நகராட்சிகளிலும்) திமுகவைச் சேர்ந்த நபர்கள் நகர்மன்ற தலைவர்களாகவும், பேரூராட்சி தலைவர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களைத் தொடர்ந்து மதியம் பேரூராட்சி மற்றும் நகராட்சி துணைத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த மறைமுக தேர்தல் நடப்பதற்கு முன்பாக சில சுவாரசிய சம்பவங்கள் அரங்கேறின. அந்தவகையில் திமுக தலைமை கழகம் கூத்தாநல்லூர் நகராட்சியை இந்திய கம்யூனிஸ்டு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், திருவாரூர் மாவட்ட திமுக மற்றும் திருவாரூர் இந்திய கம்யூனிஸ்ட் பேச்சுவார்த்தை நடத்தி துணைத் தலைவர் பதவிக்கு இந்திய கம்யூனிஸ்ட் சுதர்சனை அறிவித்துவிட்டு கூத்தாநல்லூர் நகராட்சி தலைவர் பதவியை திமுக எடுத்துக் கொண்டது. அதைப்போலவே மன்னார்குடி நகராட்சியில் முதலில் மீனாட்சி சூரிய பிரகாஷ் அவர்களுக்கு திமுக சார்பாக மன்னை நகர மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதன் பிறகு மறைந்த கலைஞர் கருணாநிதி அவர்களின் நெருக்கமாக இருந்த மன்னை நாராயணசாமி அவர்களின் பேரன் சோழராஜன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதில் திருத்துறைப்பூண்டியில் மோசமான நிகழ்வொன்றும் நடைபெற்றது. திருத்துறைப்பூண்டியில் நகராட்சி தலைவராக திமுகவைச் சேர்ந்த கவிதா பாண்டியன் அறிவித்திருந்தார்கள். அதைப்போலவே கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நகர்மன்ற துணைத்தலைவர் பதவி கட்சித் தலைமையால் கொடுக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பாக ஈஸ்வரி என்ற வேட்பாளர் அறிவிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஈஸ்வரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது இதுகுறித்து திருத்துறைப்பூண்டி காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com