சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானமே தவறு என்று எதிர்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.
பேரவையில் இருந்து திமுக எம்எல்ஏக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து மாநிலம் முழுவதும் திமுகவினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருச்சியில் நடைபெறும் போராட்டத்தில் அக்கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். காஞ்சிபுரத்தில் திமுகவின் முதன்மை செயலாளரும், எதிர்கட்சித் துணைத்தலைவருமான துரைமுருகன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்துவருகிறது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானமே தவறு. சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் அமைச்சரவை மீது இந்த மாமன்றம் நம்பிக்கை கோருகிறது என்று முன்மொழியப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அமைச்சரவை மீது இந்த மாமன்றம் நம்பிக்கை வைத்திருப்பதைத் தெரிவிக்கிறது என்று முன்மொழியப்பட்டது என்று குறிப்பிட்டார். அதிமுக எம்எல்ஏக்களின் விருப்பத்துக்கு மாறாகவே அவர்கள் பிணைக் கைதிகளைப் போல விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்ததகாக் கூறிய துரைமுருகன், சுதந்திரமாக இருக்க அனுமதித்த பிறகே வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என சட்டப் பேரவையில் தாங்கள் வலியுறுத்தியதாகக் கூறினார். அப்படி உடனடியாக நடத்த வேண்டும் என முடிவு செய்தால் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என தாங்கள் கோரிக்கை வைத்தாகவும் துரைமுருகன் தெரிவித்தார்.