அதிமுக தேர்தல் விதிகளை மீறுவதாக திமுக குற்றச்சாட்டு
அதிமுக தேர்தல் விதிமுறைகளை மீறுவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தேர்தல் ஆணையத்திற்கு திமுக கடிதம் அனுப்பியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது. இதற்காக தேர்தல் ஆணையம் மற்றும் அரசியல் கட்சிகள் தீவிரமாக பணிகளை செய்துவருகின்றனர். ஒருபுறம் கட்சிகள் வேட்புமனுத் தாக்கல் மற்றும் பிரச்சாரம் ஆகியவற்றில் தீவரமாக ஈடுபட்டுள்ளது. மறுபுறம் தேர்தல் ஆணையம் தேர்தலுக்குகான ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகிறது. அத்துடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறல்கள் குறித்தும் தேர்தல் ஆணையம் கவனித்து வருகிறது.
இந்நிலையில் திமுக சட்டப்பிரிவு செயலாளர் கிரிராஜன் தேர்தல் ஆணையத்துக்கு, அதிமுக தேர்தல் விதிகளை மீறுவதாக கடிதம் எழுதியுள்ளார். அந்தப் புகார் கடிதத்தில், அதிமுக சார்பில் கரூர் தொகுதியில் போட்டியிடும் தம்பிதுரை வேட்புமனுத் தாக்கல் செய்ய சென்ற போது தேர்தல் விதிகளை மீறி 200க்கும் மேற்பட்டோர் உடன் வந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மேலும் கரூர் மாவட்ட இணை காவல் கண்காணிப்பாளர் கும்மராஜா ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், அவரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என திமுக வலியுறுத்தி உள்ளது. இதுமட்டுமல்லாமல், கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு வங்கிகளில் அதிமுகவுக்கு ஆதரவானவர்கள் பணியாற்றுகிறார்கள் என்றும், அவர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக்கூடாது எனவும் திமுக வலியுறுத்தி உள்ளது.