திமுக ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி – எம்பி. கனிமொழி பேச்சு

திமுக ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி – எம்பி. கனிமொழி பேச்சு
திமுக ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி – எம்பி. கனிமொழி பேச்சு

திமுக ஆட்சி தான் திராவிட மாடல் ஆட்சி - புதிதாக யாரும் திராவிட ஆட்சி அமைக்க வேண்டிய அவசியமில்லை என கனிமொழி எம்.பி தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் கனிமொழி எம்.பி கலந்து கொண்டு இளநிலை மாணவ - மாணவியர்கள் 412 பேருக்கும், முதுநிலை மாணவ -மாணவியர்கள் 110 பேருக்கும் பட்டம் வழங்கினார். அப்போது மாற்றுத்திறனாளி மாணவிக்கு மேடையில் இறந்து கீழே இறங்கிச் சென்று கனிமொழி எம்.பி. பட்டம் வழங்கினார்.

இதனை தொடர்ந்து பேசிய அவர், "மாணவர்களால் எதையும் சாதிக்க முடியும், அவ்வாறு சாதித்த பின்னர் நாம் தான் என்ற மன நிலைக்கு போய்விடக்கூடாது. ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் படிக்கக் கூடாது என்ற காலம் இருந்தது. அதிலும் பெண்கள் படிக்கக் கூடாது என்ற காலகட்டம் இருந்தது. அதையெல்லாம் எதிர்த்துப் போராடி கல்வி, உயர்கல்வி எல்லோருக்கமானது என்ற சூழலை திராவிட இயக்கமும், திராவிட இயக்கத் தலைவர்களும், தந்தை பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் உருவாக்கி தந்துள்ளார்கள்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்தில் தான் அரசு கல்லூரிகள் அதிகமாக வரத்தொடங்கியது. மாணவர்கள் கல்வி கற்க வர வேண்டும் என்பதற்காக திராவிட இயக்கம் கல்லூரிகளை உருவாக்கியது. ஆனால், இன்றைக்கு சிலர் கல்லூரிக்குள் வந்துவிடக்கூடாது என்பதற்காக நுழைவுத் தேர்வு என்ற தடைகற்களை உருவாக்கி கொண்டு இருக்கிறார்கள்.

உங்கள் (மாணவர்) கையில் தான் அடுத்தகட்ட போராட்டம் இருக்கிறது. அது நம்முடைய கடமை. நமக்கு கல்வி கிடைத்து விட்டது, அடுத்த தலைமுறை, எதிர்கால தலைமுறையினருக்கும் கல்வி கிடைக்க வேண்டும். நம் முன்னோர்கள் நமக்கு இந்த பாதையை உருவாக்கி தந்து இருப்பது போல இந்த கல்வி அடுத்த தலைமுறைக்கும் கிடைக்க போராட வேண்டும்.

அதற்கான வழிவகைகளை செய்ய வேண்டும் என்று மாணவர்களை கேட்டுக்கொள்கிறேன். பல்வேறு திசைகளில் விரிந்து இருக்கக் கூடிய உலகம் இருக்கிறது. மாணவர்கள் தங்களுக்கு இருக்கக் கூடிய ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும், தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள், உங்களால் சாதிக்க முடியும், தடைகள் என்பது தேவையில்லை, உங்களால் எந்த தடையையும் தாண்ட முடியும் சாதிக்க முடியும், தன்னம்பிக்கையுடன் இந்த நாட்டை, உலகத்தை வழிநடத்த வேண்டும் என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com