“அணை பாதுகாப்பு மசோதாவை எதிர்க்க வேண்டும்” - திமுக கவன ஈர்ப்பு தீர்மானம்
அணை பாதுகாப்பு மசோதா கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என சட்டப்பேரவையில் திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்துள்ளது.
அணை பாதுகாப்பு மசோதா தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், “ அனைத்து மாநிலங்களிலும் இருக்க கூடிய அணைகளை பாதுகாப்பு என்ற பெயரில் அபகரிக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது. அணைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மாநிலங்களுடையது. அணை பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமெனில் தேவையான நிதியினை மாநிலங்களுக்கு மத்திய அரசு கொடுக்கலாம். மாநில சட்டமன்றங்களின் தீர்மானங்களை மதிக்காமல் மத்திய அரசு நடந்து கொள்கிறது. அணை பாதுகாப்பு மசோதாவை தமிழகம் எதிர்க்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் பழனிசாமி, “அனைத்து மாநிலங்களும் ஏற்று கொள்ளும் வரை இதை ஏற்கக் கூடாது என ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ளோம். அதுமட்டுமில்லாமல் மசோதா தமிழகத்திற்கு ஏற்றது அல்ல எனக்கூறி அதனை திரும்பப் பெற கடிதம் எழுதியுள்ளேன். தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு சொந்தமான 4 அணைகள் கேரளாவில் இருந்தாலும் அவை தமிழகத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளன. அதிமுக நாடாளுமன்ற உறுபினர்களும் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். அணை பாதுகாப்பு மசோதாவை திரும்ப பெற தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.