திமுக போராட்டத்திற்கு அனுமதி - உயர்நீதிமன்றம் நாளை மறுநாள் முடிவு

திமுக போராட்டத்திற்கு அனுமதி - உயர்நீதிமன்றம் நாளை மறுநாள் முடிவு
திமுக போராட்டத்திற்கு அனுமதி - உயர்நீதிமன்றம் நாளை மறுநாள் முடிவு

தமிழக அரசை கண்டித்து திமுக நடத்தும் கூட்டத்துக்கு அனுமதி அளிப்பது குறித்து மூன்றாம் தேதி முடிவு செய்யப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் 110 இடங்களில் மூன்று, நான்காம் தேதிகளில் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று திமுக அறிவித்திருந்தது. இதற்காக காவல்துறையிடம் அனுமதி கேட்டு தமிழகம் முழுவதும் திமுக நிர்வாகிகள் மனு அளித்தனர். கரூரில் கூட்டம் நடத்த காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. இதனையடுத்து தமிழகம் முழுவதும் கூட்டத்துக்கு அனுமதி அளிக்க உத்தரவிடக் கோரி திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதில் திமுக கூட்டங்களுக்கு அனுமதி தரக்கூடாது என்று டி.ஜி.பி. வாய்மொழியாக உத்தரவிட்டு இருப்பதாக கூறப்பட்டிருந்தது. 

இந்த மனுவை நீதிபதி மகாதேவன் விசாரித்த போது, தமிழகம்‌ முழுவதும் திமுகவினர் அளித்துள்ள‌ 81 மனுக்களில் இதுவரை 2 மனுக்களுக்கு மட்டுமே அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத இடங்களில் கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்படும் என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டது. அரசின் விளக்கத்தை கேட்ட நீதிபதி, இடத்தையும் நேரத்தையும் அறிவித்துவிட்டு அதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என எப்படி எதிர்பார்க்கிறீர்கள் என திமுக தரப்பிடம் கேள்வி எழுப்பினார். மேலும் அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து திமுக தரப்பு வழக்குத் தொடரவில்லை என்று கூறிய நீதிபதி, டி.ஜி.பி. வாய்மொழி உத்தரவிட்டு இருப்பதாக பொதுவான புகாரை முன்வைத்தே வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக கூறினார். 

எனினும் அனுமதி அளிப்பதில் அரசு முறையாக செயல்படவில்லை என்றால் மனுதாரர் நீதிமன்றத்தை அணுகலாம் என்று குறிப்பிட்டார். அனுமதி கேட்டு கொடுத்த மனுக்களை திமுக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, அதன்மீது எடுக்கப்பட்ட முடிவு குறித்து தெரிவிக்குமாறு அரசுக்கு ஆணையிட்டார். மேலும் வழக்கு விசாரணை மூன்றாம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com