காவல்நிலையத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ஆர்ப்பாட்டக்காரர்கள்
திருவாரூர் மாவட்டம் வடுவூரில், போராட்டத்தில் ஈடுபட்ட திமுக பிரமுகரை கைது செய்து அழைத்துச் சென்ற காவலர்கள் அவருக்கு காவல்நிலையத்திலேயே பிறந்தநாள் கொண்டாடினர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 22ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தின் போது காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில் காயமடைந்தவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்தை கண்டித்து திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதியில் திமுக மாணவர் அணி அமைப்பாளர் சிவசந்திரன் மற்றும் திமுகவினர் வடுவூரில் சாலைமறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட அவர்களை காவல் ஆய்வாளர் ஜெயந்தி தலைமையிலான காவலர்கள் கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது திமுக பிரமுகர் சிவசந்திரன், தனக்கு பிறந்தநாள் என்று காவல்நிலையத்தில் தெரிவித்த போது அவரது ஆதரவாளர்கள் கேக் வாங்கி வந்து அங்கேயே வெட்டினர். இந்தக் கொண்டாட்டத்தின்போது காவல் ஆய்வாளர் ஜெயந்தி அவருக்கு கேக் ஊட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்தக் காட்சிகள் வாட்ஸ் ஆப், ஃபேஸ் புக் ஆகியவற்றில் வேகமாக பரவி வருவதால் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. துப்பாக்கிச் சூட்டை கண்டித்து போராட்டம் நடத்துவதும், கைது செய்யப்பட்ட பின் காவல்நிலையத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுவதும் எந்த வகையில் நியாயம் என கேள்விகள் எழுந்துள்ளன.