தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றன. இருப்பினும் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன. அதேசமயம் 3 நாட்களுக்கு பின் தூத்துக்குடியிலும் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்புகிறது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22ஆம் தேதி போராட்டம் நடைபெற்றது. அப்போது ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில், போராட்டக்காரர்களுக்கு காவல்துறையினருடன் மோதல் ஏற்பட்டதன் காரணமாக கல் வீச்சு, கண்ணீர் புகை, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டன. அதில் போராட்டக்காரர்கள் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் கண்டித்து திமுக மற்றும் அதனை தோழமை கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றன. சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் போராட்டத்தில் கனிமொழி, திருமாவளவன், ஜவாஹிருல்லா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். இருப்பினும் அரசுப் பேருந்துகள் வழக்கம்போல் இயங்குகின்றன. இதேபோல 3 நாட்களுக்கு பிறகு தூத்துக்குடியில் இருந்தும் பிற ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் தூத்துக்குடியில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்புகிறது.