'கிண்டிக்கு ஒரு கேள்வி..?' - சென்னை முழுவதும் ஒட்டப்பட்ட பரபர போஸ்டர்!
அமலாக்கத்துறை சார்பில் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவை பட்டியலில் இருந்து நீக்குவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று அறிவிப்பு வெளியிட்டார். ஆளுநரின் இந்த அறிவிப்புக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் “கொலை, கொள்ளை, சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்தல் உள்ளிட்ட கடும் குற்ற வழக்குகளை சந்தித்து வரும் 34 மத்திய அமைச்சர்களை பதவியிலிருந்து விலக்கச் சொல்லி டெல்லிக்கு கடிதம் எழுதுவீங்களா கிண்டி?” என தமிழக ஆளுநரை கேள்வி கேட்டு திமுக தொண்டரும் வழக்கறிஞருமான ஹேமந்த் அண்ணாதுரை என்பவர், சென்னை முழுவதும் போஸ்டரை அடித்து ஒட்டியுள்ளார்.
சென்னை அண்ணா சாலை, ஜெமினி மேம்பாலம், அண்ணா அறிவாலயம், சென்னை Press Club வளாகம், விருந்தினர் மாளிகை, நந்தனம், பசுமை வழிச்சாலை, கிண்டி கத்திபாரா, சைதாப்பேட்டை நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் போன்ற முக்கிய இடங்களில் இந்த போஸ்டர்கள் இரவோடு இரவாக ஒட்டப்பட்டுள்ளன.
