திமுக சார்பில் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனுக்கள் வழங்க நாளை கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை என்றாலும் நாடு முழுவதும் அரசியல் கட்சிகள், கூட்டணி உடன்பாட்டில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. பல கட்சிகள் கூட்டணியை முடிவு செய்து தொகுதி ஒதுக்கீட்டையும் முடித்துவிட்டன. தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அந்தக் கூட்டணியில், கட்சிகளுக்கு இடையிலான தொகுதி ஒதுக்கீடும் முடிந்துவிட்டது.
மக்களவைத் தேர்தலில் திமுக 20 தொகுதிகளிலும் சட்டமன்ற இடைத்தேர்தலில் 21 தொகுதியிலும் போட்டியிடுகிறது. எனவே திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கு பிப்ரவரி-25 ஆம் தேதியிலிருந்து விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில், பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களை வழங்க நாளை கடைசி தேதி என திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் சென்னை அண்ணா அறிவாலயத்தில் பெறப்படும் இந்த விருப்ப மனுக்கள் மீதான நேர்காணல் வரும் 9 மற்றும் 10 ஆம் தேதி அன்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் எனவும் க.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
மேலும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட கனிமொழி, தயாநிதிமாறன், துரைமுருகனின் மகன் கதிரானந்தன்,பொங்கலூர் பழனிசாமியின் மகன் பைந்தமிழ் பாரி, அவரது மருமகன் கோபாலகிருஷ்ணன், தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர். இதுதவிர, உதயநிதி ஸ்டாலின் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, கடலூர் நகர செயலாளர் தண்டபாணி விருப்பமனு அளித்துள்ளார். இடைத்தேர்தலில் போட்டியிட சமீபத்தில் திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜியும், அஞ்சுகம் பூபதியும் விருப்பமனு அளித்துள்ளனர்.