மகாத்மா காந்திக்கு தமிழக அரசு மரியாதை தரவில்லையா? ஆளுநர் குற்றச்சாட்டுக்கு அமைச்சர்கள் எதிர்ப்பு!
நாடு முழுவதும் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 78வது நினைவு நாள் ஜனவரி 30-ம் தேதியான நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அரசியல் தலைவர்கள் மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், உருவப்படத்துக்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில் காந்திஜி தனது வாழ்நாளில் திராவிட சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டு கேலி செய்யப்பட்டதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்த கருத்து விமர்சனத்தை பெற்றுவருகிறது.
கடுமையாக கேலி செய்யப்பட்டார் காந்திஜி..
இதுகுறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஆளுநர், “சென்னை கிண்டியில் 1956 ஆம் ஆண்டு காமராஜரால், காந்தியடிகளுக்கு பிரம்மாண்டமான நினைவுச்சின்னம் கட்டப்பட்டது.
காந்தியின் பிறந்த நாள் மற்றும் உயிர்த் தியாக தினத்தை நகர அருங்காட்சியகத்தின் ஒரு மூலையில் நடத்துவதில் ஏதேனும் அர்த்தம் உள்ளதா?
தேசப்பிதாவுக்கு உரிய மரியாதை செலுத்தவும் அத்தகைய நிகழ்வுகளை காந்தி மண்டபத்தில் தகுந்த முறையில் நடத்தவும் முதலமைச்சரிடம் பல முறை நான் கோரிக்கைகள் விடுத்தேன். ஆனால் அவர் அவற்றை பிடிவாதமான மறுத்துவிட்டார்.
காந்திஜி, தனது வாழ்நாளில், திராவிட சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டு கேலி செய்யப்பட்டுள்ளார். ஆனால், இன்றும் அவர் தொடர்ந்து கேலி செய்யப்பட வேண்டுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆளுநர் கருத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு..
இதையடுத்து ஆளுநர் கருத்திற்கு பதலளித்திருக்கும் அமைச்சர் சாமிநாதன், “மகாத்மா காந்தியின் நினைவு நாளை அரசியலாக்குவதை தவிர்த்து மக்களிடையே நல்லிணக்கத்தை வளர்க்க கவனம் செலுத்துங்கள்” என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியிருக்கும் அவர், ”அண்ணாவின் வழி வந்த நாங்கள் தேசத்தையும் தேசப்பிதாவையும் நேசிப்பவர்கள். தேசப்பிதாவை கொன்றவர்களைக் கொண்டாடுகிறவர்கள் அல்ல நாங்கள். காந்தி ஏன் கொல்லப்பட்டார்? அவரை கொன்றது யார்? என்பது எல்லாம் ஆளுநருக்கு தெரியும்தானே?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேபோல, ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளதற்கு திமுக எம்எல்ஏ பரந்தாமன் மறுப்பு தெரிவித்துள்ளார். காந்தியை கொலை செய்த ஆர்.எஸ்.எஸ். இயக்கம் போல் திராவிட இயக்கம் இல்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து பேசியிருக்கும் அவர், “ஆளுநர் அழைத்து முதலமைச்சர் வரவில்லை என்று கூறுவதே தவறு, அரசு நிகழ்ச்சி நடத்தும் இடத்துக்குதான் ஆளுநர் வர வேண்டும். அதுவே மரபு. திராவிட சித்தாந்தம் இருக்கும் யாரும் காந்தியை சுட்டுக் கொல்லவில்லை. ஒரு கையில் காந்திக்கும் மறு கையில் கோட்சேவுக்கும் மாலை அணிவிப்பது நாங்கள் அல்ல. கருத்தியல் மோதல் இருக்கும் எதிரியை கொலை செய்யும் அநாகரிகம் எங்களுக்கில்லை” என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல ஆளுநர் கருத்து குறித்து பேசியிருக்கும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, "ஆர்.என்.ரவி ஆளுநராக செயல்பட்டால் எல்லோருக்கும் சிறப்பு, அவர் அரசியல்வாதியாக செயல்பட்டால் உண்மையாக நாங்கள் என்ன செய்தாலும் அவருக்கு பாராட்ட மனமிருக்காது. சுதந்திர போராட்ட தியாகி காந்திக்கு நாங்கள் என்றும் மரியாதை செலுத்திதான் வருகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.