
திருவண்ணாமலையில் நடைபெறும் திமுக வடக்கு மண்டல கூட்டத்தில், 29 கழக மாவட்டங்களைச் சேர்ந்த 91 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து 1,30,329 கிளை, வார்டு மற்றும் பாக நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். கூட்டம் நடைபெறும் திடல் 135 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு, 5,000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் மற்றும் வாகனங்களை நிறுத்துவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வருகை தரும் நிர்வாகிகளுக்கு புகைப்படம் மற்றும் பெயருடன் கூடிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியாக அமர்வு இடங்கள் ஒதுக்கப்பட்டு, ஒழுங்கமைப்புப் பணிகளுக்காக பிற மண்டலங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் தன்னார்வலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். நிகழ்ச்சி வளாகத்தில் திமுக வரலாறு மற்றும் இளைஞர் அணியின் 45 ஆண்டு பயணத்தை விளக்கும் புகைப்படக் கண்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ உட்பட 27 புத்தகங்கள் அடங்கிய முத்தமிழறிஞர் பதிப்பக அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மேடையில், திமுக சிறப்பை விவரிக்கும் ‘தொடரும் திராவிடம்’ என்ற நாடகம் நடத்தப்பட உள்ளது. மேலும், குடிநீர், நொறுக்குத்தீனிகள், இரவு உணவு, மொபைல் கழிவறைகள் மற்றும் மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.