தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு இடையூறு செய்வது எந்தக் கொள்கை என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். அது காவிக்கொள்கை. அந்த கொள்கைக்கு எதிராக இந்த இயக்கம் போராடிக்கொண்டு இருக்கிறது. இன்று அக்கொள்கையின் அரசியல் முகம் பாஜக. இரு தினங்களுக்கு முன் கூட எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சியை காப்பாற்றியதே பாஜகதான் என்று உண்மையை பேசியிருக்கிறார். அந்த கைப்பாவை அரசை தூக்கி எறிய திமுகதான் காரணம் என்று நம்மீது பாஜக வன்மத்தை கொட்டிக்கொண்டு இருக்கிறார்கள். அதனால்தான் நமக்கு இவளவு குடச்சலைக் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். அதைப்பார்த்து முடங்கிவிடுவோம் என நினைத்தார்கள். திமுக என்ன மிரட்டலுக்கு பயப்படுகிற கட்சியா? இந்தியாவிலேயே முதல்முறையாக மாநில கட்சி ஆட்சியை பிடித்தது எனும் வரலாறை அமைத்தது நாம். 74 ஆண்டுகால வரலாறு நமக்கு இருக்கிறது.
அதன்பின் தமிழ்நாட்டு அரசியலுக்கு வந்த ஒவ்வொரு கட்சியும் திமுகவை அழிப்போம்.. ஒழிப்போம் என்றார்கள். ஏன் இப்போதும் சிலர் பேசிக்கொண்டு இருக்கிறார்களே.. இப்போதும் திமுகவுக்கு நாங்கள்தான் மாற்று என்று பேசுகிறார்கள். தமிழ்நாட்டின் வளர்ச்சியை மாற்றி பின்னுக்கு இழுத்து செல்ல போகிறார்களா? நம் கொள்கைகளை விட சிறந்த கொள்கைகளை யாராவது பேசுகிறார்களா?