தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றும் திமுக; முதல்வர் ஆகிறார் மு.க.ஸ்டாலின்!

தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றும் திமுக; முதல்வர் ஆகிறார் மு.க.ஸ்டாலின்!
தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றும் திமுக; முதல்வர் ஆகிறார் மு.க.ஸ்டாலின்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 150-க்கும் மேற்பட்ட இடங்கள் வசமாகும் நிலையில், திமுக கூட்டணியின் வெற்றி உறுதியாகியிருக்கிறது. திமுக 120 இடங்களுக்கும் மேற்பட்ட இடங்களை வசப்படுத்தி, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதும் தெளிவுபட தெரிகிறது. இதன்மூலம், தமிழக முதல்வராகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

தமிழகத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கி, கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடைபெற்று வந்தது. இதில், மாலை 6 மணி வெற்றி + முன்னிலை நிலவரப்படி, திமுக கூட்டணி 156 இடங்களை வசப்படுத்தும் நிலையில் இருந்தது. இந்தக் கூட்டணியில் திமுக 124 இடங்களையும், காங்கிரஸ் 16 இடங்களையும் கைப்பற்றும் நிலையில் இருந்தன. மதிமுக 4, சிபிஎம் 2, சிபிஐ 2, விசிக 4, பிற கட்சிகள் 4 இடங்களில் வெல்லும் நிலையில் இருந்தன.

எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராகக் கொண்ட அதிமுக கூட்டணி 78 இடங்களில் வெற்றியும் முன்னிலையும் பெற்றிருந்தன. இந்தக் கூட்டணியில் அதிமுக 68 இடங்களையும், பாமக 5 இடங்களையும், பாஜக 4 இடங்களையும் கைப்பற்றும் நிலையில் இருந்தன.

உண்மையாக உழைப்பேன்: ஸ்டாலின்

இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "6ஆவது முறையாக திமுக ஆட்சி செய்ய கட்டளையிட்டுள்ள தமிழக வாக்காளர்களுக்கு நன்றி. திமுகவின் மீது வீசப்பட்ட அவதூறுகளை வாக்குகளால் ஓரங்கட்டிய தமிழக மக்களுக்கு நன்றி. தமிழ்நாட்டு மக்களுக்கு உண்மையாக இருப்பேன், உழைப்பேன்" என்று கூறியுள்ளார்.

தமிழகத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, அமமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி என 5 முனை போட்டி நிலவியது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் 25 தொகுதிகள், சிபிஎம், சிபிஐ, விசிக, மதிமுக ஆகிய கட்சிகள் தலா 6 தொகுதிகளிலும், கொமதேகவுக்கு நான்கு தொகுதிகளும், ஐயுஎம்எல் கட்சிக்கு 3 தொகுதிகளும், மமகவுக்கு 2 தொகுதிகளும், ஆதித்தமிழர் பேரவை, தமிழக வாழ்வுரிமை கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி, மக்கள் விடுதலைக்கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டது. திமுக 173 தொகுதிகளில் நேரடியாக களமிறங்கியது.

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகளும், பாஜகவுக்கு 20 தொகுதிகளும், தமாகாவுக்கு 6 தொகுதிகளிலும், மூவேந்தர் முன்னேற்ற கழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், மூவேந்தர் முன்னணி கழகம் ஆகிய கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன.

அமமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 60 தொகுதிகளும், எஸ்டிபிஐக்கு 6 தொகுதிகளும், ஏஐஎம்ஐஎம்க்கு 3 தொகுதிகளும், மருதுசேனை, கோகுலம் மக்கள் கட்சி, விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் கூட்டணியில் ஐஜேகே வுக்கு 40 தொகுதிகளும், சமத்துவ மக்கள் கட்சிக்கு 37 தொகுதிகளும், தமிழக மக்கள் ஜனநாயக கட்சிக்கு 11 தொகுதிகளும், மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு 3 தொகுதிகளும், ஜனநாயக திராவிட முன்னேற்றகழகம் , பிரகதிஷீல் சமாஜ்வாதி கட்சி ஆகியவை தலா 2 தொகுதிகளிலும், தலித் முன்னேற்ற கழகம், புதிய விடுதலைக்கட்சி, குறிஞ்சி வீரர்கள் கட்சி, வஞ்சித் பகுஜன் கட்சி ஆகிய கட்சிகள் தலா 1 தொகுதியில் போட்டியிட்டன, மநீம 135 தொகுதிகளில் போட்டியிட்டது.

நாம் தமிழர் கட்சி கடந்த தேர்தல்களை போலவே இந்த முறையும் கூட்டணி அமைக்கவில்லை. 234 தொகுதிகளும் தனித்து களம் இறங்கியது.

கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டைப் பொறுத்தவரையில், அதிமுகவை விட திமுக சிறப்பாக கையாண்டது என்பது அரசியல் நோக்கர்களின் பார்வை. தொகுதிப் பங்கீட்டில் இழுபறிகளும் அதிருப்திகளும் இருந்தாலும், கூட்டணி கட்சிகளும் அதிமுக - பாஜக - பாமக கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன் பெரிதாக நெருக்குதல் எதையும் தரவில்லை.

திமுக வாக்குறுதிகள்:

திமுக ஆட்சி அமைந்த உடன், ஜூன் 3ஆம் தேதி அதாவது கருணாநிதி பிறந்தநாளில் கொரோனா நிவாரண நிதியாக 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தது. அதேபோல குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை, சமையல் கேஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம், அரசு உள்ளூர் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்து தேர்தலை சந்தித்தது.

இவை தவிர பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாய், பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும் என்ற வாக்குறுதிகளும் கவனம் பெற்றன. நகை மற்றுக் கல்விக் கடன்கள் தள்ளுபடி, மீண்டும் சட்ட மேலவை அமைக்கப்படும், தமிழகத்தில் அமைந்துள்ள தொழில் நிறுவனங்களில் 75 விழுக்காடு வேலைவாய்ப்புகளை தமிழர்களுக்கே வழங்கப்பட வேண்டும் என சட்டம் இயற்றப்படும் என்றும் திமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு டிஜிட்டல் மீடியா சார்ந்த விளம்பர யுக்திகளை திமுக - அதிமுக இரு கட்சிகளுமே தீவிரமாக பின்பற்றின. எனினும், அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையிலான உறவை மையப்படுத்தி, திமுக அதிதீவிர பிரசாரத்தில் ஈடுபட்டது கவனிக்கத்தக்கது.

துல்லியமானது புதிய தலைமுறை கணிப்பு:

தமிழகம் முழுவதும் மக்களின் மனநிலை என்ன என்ற தலைப்பில் புதிய தலைமுறை, தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு நடத்தியது. அதில் பல்வேறு கேள்விகள் இடம்பெற்றிருந்தன. அதன் முடிவில், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமையும் என்பது தெரியவந்தது. அதன் விவரம்:

தமிழகத்தில் யாருக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும்?

  • திமுக கூட்டணி : 151 - 158
  • அதிமுக கூட்டணி : 76-83

தற்போது வெளிவந்துள்ள தேர்தல் முடிவுகள், புதிய தலைமுறையின் கருத்துக் கணிப்புகள் துல்லியமாக இருந்துள்ளதை மெய்ப்பித்துள்ளது.

இதேபோல், பல்வேறு ஊடக நிறுவனங்களும் ஏஜென்சிகளுடன் இணைந்து நடத்தி வெளியிட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை பிரதிபலிபலிக்கும் வகையிலேயே தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com