பெண் கலைஞர்கள் குறித்த ராதாரவியின் கருத்து கண்டனத்திற்குரியது - ஸ்டாலின்

பெண் கலைஞர்கள் குறித்த ராதாரவியின் கருத்து கண்டனத்திற்குரியது - ஸ்டாலின்

பெண் கலைஞர்கள் குறித்த ராதாரவியின் கருத்து கண்டனத்திற்குரியது - ஸ்டாலின்
Published on

நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த நடிகர் ராதாரவிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்

நயன்தாரா நடித்துள்ள படம் 'கொலையுதிர் காலம்'. இந்தப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் பேசிய நடிகர் ராதாரவி, நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார். நடிகை குறித்த ராதாரவியின் கருத்துக்கு திரைத்துறையினர் மட்டுமின்றி பலரும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த இயக்குநர் விக்னேஷ்சிவன், ''பாரம்பரியம் மிக்க குடும்பத்திலிருந்து வந்தவரின் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் அருவருப்பானவை'' என்று தெரிவித்தார். ராதாரவியின் பேச்சு தொடர்பாக கருத்து கூறிய அவரின் சகோதரியும் நடிகையுமான ராதிகா சரத்குமார், ராதாரவியை சந்தித்தேன். அவர் பேசியது முற்றிலும் தவறு என்று சொன்னேன் என்று தெரிவித்தார்.

இதற்கிடையே நடிகர் ராதாரவி கழகக் கட்டுப்பாட்டை மீறியும் கழகத்துக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் என்று திமுக அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில் நடிகர் ராதாரவிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், ''பெண்ணுரிமை முன்னிறுத்தும் திமுகவில் அங்கம் வகிக்கும் நடிகர் ராதாரவி அவர்களின் திரைத்துறை சார்ந்த பெண் கலைஞர்கள் குறித்த கருத்து ஏற்க இயலாதது. கடும் கண்டனத்திற்குரியது. கழகத்தினர் யாவரும் கண்ணியம் குறையாத வகையில் கருத்துகளை தெரிவிக்க வேண்டும். மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே நயன்தாரா குறித்த கருத்துக்கு வருத்தம் தெரிவித்த நடிகர் ராதாரவி, என்னால் திமுகவுக்கு பாதிப்பு என்றால் கட்சியில் இருந்து விலகிக் கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com